உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு சம்மதிப்பதும் பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண், பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விட கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்துச் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்”

நாகரீகம் வளர்வதற்கு முந்தைய கற்காலத்தில், மனிதன் கால்நடைகளைப் போன்று வாழ்ந்தான் என்பதை வரலாற்றுப் பாடங்களில் படித்துள்ளோம். அத்தகைய காலகட்டங்களில் அச்சமூகத்திற்குத் தலைமையேற்ற ஏதோ ஒரு நல்ல பண்பாட்டுப் பழக்கவழக்கங்களைக் கொண்ட மன்னன் மேற்கண்டக் கட்டளையை இட்டுள்ளான் என நினைத்தால்…. அது தவறு!

இது நாகரீகம் வளர்ந்து உச்சியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்த 17 – 18 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு மன்னன் பிறப்பித்தக் கட்டளையாகும். 17 – 18 ஆம் நூற்றாண்டிலும் மக்கள் கால்நடைகளைப் போன்று காணும் ஆடவர், பெண்டிருடன் உறவு வைத்து நடந்தனர் என்பதை நம்பமுடியவில்லை தானே?. ஆனால் அது தான் உண்மை!

சரி, யார் இந்த மன்னன்?. எங்கு, எதற்காக, எந்தத் தருணத்தில் இந்தக் கட்டளையை அந்த மன்னன் பிறப்பித்தான்? என்பதை அறிய ஆவலாக உள்ளதா?.

இவ்வாறு கட்டளையிட்டது, இந்தியாவைப் பலகூறாகப் பிரித்து ஆண்டு கொண்டிருந்த சேர, சோழ, பாண்டிய, பல்லவ, இராஜபுத்திர இன்னபிற மன்னர்களில் எவராவது ஒருவராக இருப்பார் எனக் கருதுவீர்களானால்……. அதுவும் தவறானதே.

இவ்வாறான அதிரடி உத்தரவைப் பிறப்பித்தவர் வேறு யாரும் அல்ல – இந்தியாவை அடக்கியாண்டுக் கொண்டிருந்தப் பரங்கியர்களுக்குச் சிம்மச்சொப்பனமாகத் திகழ்ந்து வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வீரத்துடன் வாழ்ந்த தீரர் திப்பு சுல்தானே தான்.

TIPPU SULTHAAN
TIPPU SULTHAAN

கேரள நம்பூதிரிகளின் அக்ரஹார அலங்கோல ஆச்சாரங்களை ஒரே கட்டளையின் மூலம் தகர்த்தெறிந்தத் திப்புவின் இந்தக் கட்டளைக்கான காரணம் என்ன? தனது ஆட்சிபரப்பை விரிவாக்கும் எண்ணத்தில் கேரளத்தில் அடியெடுத்து வைத்தத் திப்புவின் வாயிலிருந்து வெளியான இந்தக் கட்டளைக்கும் அன்றையக் கேரள அரசவைக் கூட்டத்தையும் அடிதட்டு மக்களையும் ஒருங்கே கைகளில் அடக்கி ஆட்சி செய்துகொண்டிருந்த நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம்?

 

திப்புவைக் குறித்துப் பேசப்படும் வரலாற்று நூல்களில் பெரும்பாலானவைகளிலெல்லாம் காணப்படும் பிரசித்தமான இந்தத் திப்புவின் கட்டளைக்குக் காரணம் தான் என்ன?. அதனை அறிந்துக் கொள்ள வேண்டுமெனில், திப்பு கேரளத்தில் கால்பதித்த வேளை கேரள மக்கள் எந்நிலையில் வாழ்ந்து வந்தனர் என்பதைக் குறித்துத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

 

 

சிறிது வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்….

விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பின் மைசூரில் பிரபல சக்தியாக வளர்ந்து வந்த ஹைதர் அலியின் படை, அக்காலத்தில் மலபார் என அறியப்பட்டிருந்தக் கேரளத்தினுள் நுழைந்துத் தெற்கு மலபாரை ஆட்சி செய்துக் கொண்டிருந்த கேரள வரலாற்றில் மிகப்பெரிய மஹாராஜாவாக அறியப்பட்டிருந்த சாமிரி ராஜாவை அடக்கி அடிபணியவைத்ததோடு ஹைதர் அலியின் மைசூர் ஆட்சி மலபாருக்கும் விரிவடைந்தது. அதனைத் தொடர்ந்து 1773 ல் மைசூர் ஆட்சியின் மலபார் கவர்னராக ச்ரீநிவாச ராவ் பதவியேற்றது முதல் 1790 வரையுள்ள 16 ஆண்டு காலம் மலபார், மைசூர் ஆட்சியின் கீழ் இருந்தது.

இதில் 9 ஆண்டுகள் ஹைதர் அலியும் 7 ஆண்டுகள் திப்புவும் ஆட்சி செலுத்தினர். மிகக் குறுகிய இந்தக் காலயளவில் மலபார் மக்களின் வாழ்க்கை முறையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்த திப்பு முனைந்திருந்தாலும் இஸ்லாமிய பெயர் கொண்ட ஒரு நவீனத்துவ முகம் கொண்டிருந்ததால் அவரின் சீர்திருத்தங்கள் மூட பழக்க வழக்கங்களிலும் கீழ்த்தர ஆச்சாரமுறைகளிலும் கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருந்த அச்சமூகத்தில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தாமல் போனது.

அக்காலகட்டத்தில், சமூகத்தின் எல்லாப் பகுதி மக்களையும் தம் கைகளில் அடக்கி வைத்திருந்த நம்பூதிரிமார்கள், தாழ்த்தப்பட்ட பெண்களையும் ஆண்களையும் அடக்கியாண்டு மோசம் செய்து கொண்டிருந்தனர். தங்களைத் தெய்வத்தின் பிரதிநிதிகளாகவும் பூஜிக்கப்பட வேண்டியவர்களாகவும் அவர்கள் மனதில் நினைத்துக் கொண்டிருந்தனர். அந்த எண்ணத்தைச் சமூகத்தில் விதைப்பதிலும் அவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

“அவரின் – நம்பூதிரியின் – உடல் பவித்ரமானதாகும். சலனம் தெய்வீகக் காட்சியாகும். அவர் உண்டு மீந்த உணவு அமிர்தமாகும். மனித உயிர்களில் ஏற்றவும் உயர்ந்த நிலையில் பூஜிக்கப்பட வேண்டியவர்களாவர்; பூமியில் தெய்வத்தின் பிரதிநிதிகளாவர். இக்காரணங்களால் அவர்களுடன் எந்தப் பெண்ணிற்கு உறவு கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றதோ அவள் பாக்கியம் பெற்றவள்” என்று அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே நம்பிக்கை ஊட்டப்பட்டிருந்தது.

“நம்பூதிரியை மகிழ்ச்சியடைய வைப்பது தெய்வத்தைத் திருப்திபடுத்துவதற்குச் சமமானதாகும். நாயர் பெண்களுடன் சயனிப்பதற்கான உரிமை கடவுள் அவர்களுக்கு வழங்கியதாகும். அதனை நிராகரிப்பவர்கள் – எதிர்ப்பவர்கள் – தெய்வக்குற்றத்திற்கு ஆளாவர்”. இது போன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் பரவியிருந்தக் காரணத்தால், அழகான பெண் குழந்தைகளைப் பெற்றிருந்த நாயர் குடும்பங்கள் தங்கள் பெண்களை ஏதாவது ஒரு நம்பூதிரியுடன் சயனிக்க வைக்க மனப்பூர்வமாக விரும்பியிருந்தனர்.

“சூத்திரப் பெண்கள் பத்தினித்தன்மையைப் பேண வேண்டிய அவசியம் இல்லை எனவும் நம்பூதிரிகளின் ஆசாபாசங்களை நிறைவேற்றி வைக்க சுயம் சமர்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் இது கேரளத்திற்கு ஆச்சாரங்களைப் பரிசளித்தப் பரசுராமன் போட்டக் கட்டளையாகும் என ஆச்சாரங்களைக் கற்பித்துப் போற்றும் பிராமணர்கள் தெரிவிக்கின்றனர்”. (சி. அச்சுதமேனோன் – கொச்சின் மாநில கையேடு – 1910. பக்கம் 193. c. achchutha menon – Cochin State Manual – 1910. Page No: 193.)

நம்பூதிரி ஆண்களுக்கு உடன்படாத தாழ்த்தப்பட்டப் பெண்களை வழிகெட்டவர்களாக நினைத்து மக்கள் அவர்களை ஒதுக்கினர். அவ்வாறான வழிகெட்டப் பெண்களைக் கொன்றுவிடும் அளவிற்கு அன்று நம்பூதிரிமார்களுக்கு அதிகாரம் இருந்தது. கார்த்திகப்பள்ளியிலுள்ள தெருக்களில் காணப்பட்ட விளம்பரங்கள் இவற்றைச் சரியென எடுத்தியம்புகின்றன.அங்கு காணப்பட்ட ஒரு விளம்பரம் இவ்வாறு கூறுகின்றது: “நம்முடைய நாட்டில் சொந்தம் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ, உயர் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ வழங்கி வராத வழிகெட்டப் பெண்கள் உண்டு எனில் அவர்களை உடனடியாக கொன்று விட வேண்டும்” (கேரள வரலாற்றின் இருண்ட பக்கங்கள், இளம்குளம் குஞ்ஞன் பிள்ளை – பக்கம் 147).

நம்பூதிரிமார்கள் கீழ்ஜாதி பெண்களைக் கற்பழித்தால் கூட தண்டிக்கப்படுபவர்கள் அந்தக் கீழ்ஜாதி பெண்களாகத் தான் இருப்பர்.

“நம்பூதிரிகள் கீழ்ஜாதி பெண்டிர் மீது வன்கொடுமை செலுத்தினால் அந்த நபரின் கண்களைக் குத்த வேண்டும்(கண்கள் சிறிது காலத்திற்குக் கட்டப்பட வேண்டும் என்பது தான் சாதாரணமாக நடைமுறைபடுத்தப்பட்டிருந்தது). அந்தக் கீழ்ஜாதி பெண்ணையும் அவள் குடும்பத்தையும் கொன்றொழிக்கவோ அல்லது முஸ்லிம்களுக்கு விற்றுவிடவோ செய்ய வேண்டும். அப்பெண்ணின் அழகு நம்பூதிரியைப் பாதிப்படைய வைத்ததே அவளும் அவள் குடும்பத்தினரும் செய்த தவறு”(கேரளம், ஃப்ரான்ஸிஸ் புக்கானன் – பக்கம் 75).

கீழ்ஜாதி பெண்டிர் மீது உயர்சாதியினரால் நிகழ்த்தப்பட்ட உச்சக்கட்ட அடக்குமுறையாகும் இது.

நம்பூதிரிகளின் திருமணமுறை இதனைவிட விசித்திரமானதாகும்.

நம்பூதிரிகளில் மூத்த சகோதரன் மட்டுமே சொந்தம் ஜாதியில் திருமணம் செய்ய வேன்டும். மற்றவர்கள் நாயர் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். மூத்த சகோதரனுக்கு மட்டுமே திருமணம் செய்வது அனுமதிக்கப்பட்டது என சங்கரஸ்மிருதியும் கட்டளையிடுகின்றது.

“ஏக ஏவ க்ருஹம் கச்சேத் – ஜ்யேஷ்ட புத்ரோன சேரெ:
ஃப்ராத்ருஷ்வேகய் புத்ரிண(2-2-16)

இவ்வாறு மூத்த மகனுக்கு மட்டும் திருமணத்தை விதியாக்கி விட்டு மற்றவர்களின் விஷயத்தில் சங்கரஸ்மிருதி மௌனம் கடைபிடிக்கின்றது” (கேரள பிராமண வாழ்க்கையில், ஸ்மிருதி… – டாக்டர். பி.வி. ராமன்குட்டி).

இவ்வாறான நடைமுறைக்கு ஒவ்வாத விதிகளைக் கடுமையாகப் பேணியதால் நம்பூதிரிகளின் சமுதாயத்தில் உள்ள பெண்களும் பலவகைகளில் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக நம்பூதிரி சமுதாயத்தில் விளைந்த மோசமான விளைவுகளை வரலாற்றாசிரியர்கள் பலர் ஆவணப்படுத்தியுள்ளனர்.

“நம்பூதிரி வீட்டில் மூத்த மகனுக்கு மட்டுமே திருமணம் செய்வதற்கு அனுமதி உண்டு. இந்தச் சௌகரியத்தை உபயோகப்படுத்தி வீட்டின் மூத்தமகன் குறைந்தது மூன்று திருமணமாவது செய்துக் கொண்டார். பல வேளைகளிலும் வரனாக இருந்த மூத்த மகன் முடமானவனாக இருப்பார் அல்லது மத்திய வயது கடந்தவனாக இருப்பார். இவ்விதம் ஒருவருவருக்கு பதினொன்றும் பதிமூன்றும் வயதுடைய ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பர்”. (கண்ணீரும் கனவும், வி.டி. பட்டதிரிபாடு – பக்கம் 120).

“மூத்த சகோதரன் மட்டும் சொந்தம் ஜாதியில் திருமணம் செய்வதும் மற்ற சகோதரர்கள் நாயர் பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம் திருமண வயதைக் கடந்த மிக அதிகமான கன்னிகள் நம்பூதிரி சமுதாயத்தில் இருப்பர். இதே நேரம் வீட்டில் மூத்த சகோதரன் பல மனைவிமார்களுடனும் இருப்பார்”(19 ஆம் நூற்றாண்டில் கேரளம், பி. பாஸ்கரன் உண்ணி – பக்கம் 120).

“இவ்விதம் நம்பூதிரி பிரம்மச்சாரிகள், சூத்திர பெண்டிருடன் சோமபானங்களின் மத்தியில் சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது, நம்பூதிரி கன்னிப் பெண்கள் கர்ப்பகிருகத்தின் உள்பக்கம் தனிமையில் அடைக்கப்பட்டிருப்பர். இவர்கள் மிகக் கடுமையான பாதுகாவல்களுடன் கண்காணிக்கப்படுவர். பலர் திருமணம் செய்ய முடியாமல்(வரன் கிடைக்காமல்) வாழ்ந்துக் கன்னிகளாகவே இறக்கவும் செய்வர்”

(கொச்சி நாடின் வரலாறு, கெ.பி. பத்மநாப மேனோன் – பக்கம் 896)