தேசத் தந்தை மகாத்மா காந்தியின் சாம்பலும், அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ரத்தத்தின் மாதிரியும் தன்னிடம் உள்ளதாக மகாத்மா காந்தியின் நினைவுச் சின்னங்களை சேகரித்து வைத்துள்ள அமெரிக்கர் ஜேம்ஸ் ஓடிஸ் தெரிவித்துள்ளார்.
காந்தியின் கைக்கெடிகாரம், மூக்கு கண்ணாடி, தட்டு, பேழை, ஒரு ஜோடி காலணிகள் ஆகியவற்றை ஜேம்ஸ் ஓடிஸ் பொது மக்கள் ஏலத்திற்கு விடுவதாக அறிவித்திருந்தார். தற்போது இந்த பட்டியலில் காந்தியின் சாம்பல் மற்றும் கொலை செய்யப்பட்ட அந்த இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ரத்தத் துளிகளின் மாதிரி, டெல்லி இர்வின் மருத்துவமனையில் செய்யப்பட்ட காந்தியின் ரத்தப் பரிசோதனை அறிக்கை, மாணவர்களுக்கு அவர்கள் நடத்திய அமைதி போராட்டத்தை வாழ்த்தி காந்தி கையெழுத்திட்டு அனுப்பிய தந்தி போன்றவற்றையும் தனது ஏலப்பட்டியலில் சேர்த்துள்ளார் ஓடிஸ்.
காந்தியின் இந்த போருட்களுக்கு 20,000 முதல் 30,000 அமெரிக்க டாலர்கள் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் ஏலம் செல்லச் செல்ல விலைகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தப் பொருட்களை ஏலம் விடுவதற்கு இந்திய அரசு முட்டுக் கட்டை போட்டு வரும் நிலையில், ஏலத்தில் இந்திய அரசின் பிரதி நிதிகள் கலந்து கொள்வார்களா அல்லது அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மூலம் ஏலம் வழியாக காந்தியின் இந்த பொருட்களை தேசத்திற்கு கொண்டு வருவார்களா என்பது இன்னமும் தெரியவில்லை.
|