இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற ‘தமிழர் நாடு’ வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்த அவர் பேசுகையில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த உண்ணாவிரதத்தை நடத்துகிறோம். கடந்த ஆண்டு இந்திய அரசு ராணுவ உதவி செய்வதாகவும், ஆயுதங்கள் வழங்கி வருவதாகவும் செய்திகள் வந்தன. இதை மத்திய அரசு மறுக்கவில்லை. இந்திய பாதுகாப்புதுறை உயர் அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் இலங்கை சென்றதாகவும் கூறப்பட்டது. அதையும் மத்திய அரசு மறுக்கவில்லை, திமுகவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மத்தியில் அங்கம் வகிக்கும் திமுக மந்திரிகள் ராஜினாமா செய்வதாக மிரட்டிக் கூட பார்க்கவில்லை. இதுபற்றி கேள்வி கேட்ட என்னை கருணாநிதி கேலி செய்கிறார். இது முழுக்க முழுக்க மத்திய அரசு சம்பந்தப்பட்டது. இது கூட ஜெயலலிதாவுக்கு தெரியவில்லையே என்றார். ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு ராணுவ உதவிகள் வழங்குவது வழக்கமான நடைமுறைதான். ஆனால் இந்தியா வழங்கும் ஆயுத உதவியும், பயிற்சியும் யாருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இலங்கைக்கு வழங்கப்படும் முழு ஆயுத பலத்தையும் அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள். இலங்கை ராணுவம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறலாம். ஆனால் அங்கு உயிரிழப்போரின் எண்ணிக்கையைப் பார்த்தால் புலிகள், போராளிகள் தவிர அப்பாவி மக்களும் பலியாவது தெரிய வருகிறது.. தமிழகத்தைச் சேர்ந்த 10 மத்திய மந்திரிகள் உள்ளனர். அவர்கள் இதை ஏன் எதிர்க்கவில்லை. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசுக்கான ஆதரவு வாபஸ் என்ற பிரம்மாஸ்திரத்தை கருணாநிதி பயன்படுத்தமாட்டார். அறிக்கை மட்டும் விடுவார். இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் என்னுடைய நிலைப்பாட்டை அனைவரும் அறிவர். இலங்கையில் உள்ள தமிழர்கள் அங்குள்ள சிங்களவர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற தமிழர்களின் உரிமைக் குரலை நாங்கள் அங்கீகரிக்கிறோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சம உரிமை ஆகிய இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய போராட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆயுதம் ஏந்திய போராட்டத்தை எதிர்க்கிறோம். ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இறக்க காரணமான திசை மாறிப்போன ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் விளைவாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இலங்கை அதிபருடன் நம் பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்கு இனப் படுகொலையை உடனடியாக நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்று நான் கருணாநிதிக்கு ஆலோசனை கூறினேன். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தமிழக மக்கள் அனைவரும் பிரதமர் அலுவலகத்திற்கு தந்திகள் அனுப்ப வேண்டும் என்றார். பின்னர் பிரதமரை வற்புறுத்த, மத்திய ஆளும் கூட்டணியிலிருந்து விலக வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதையும் செய்யத் தயார் என்று அறிவித்தார். இன்று நாம் உண்ணாவிரதம் இருப்பதினால், பசியினால் வாடும் இலங்கைத் தமிழர்களின் வயிறு நிரம்பப்போவதில்லை. இந்த உண்ணாவிரத அறப்போராட்டம் ஒரு அடையாளமே. இந்த உண்ணாவிரதத்தின் மூலம், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் துயர நிகழ்வுகள் குறித்து, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் கவலை அடைந்து இருக்கிறார்கள் என்பதையும், இது போன்ற சம்பவங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் நடந்து கொள்கிற விதம், தமிழக மக்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது என்பதையும் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தெரியப்படுத்துகிறோம்.