பொருளாதாரப் பின்னடைவில் சிக்கியுள்ள முதலாளித்துவ பொருளாதார அமைப்பைக் கொண்ட அமெரிக்கா தனது நிதி-அரசியல் அமைப்பை மறுசீரமைக்க (பெரஸ்ட்ரோய்கா) முன்வர வேண்டும் என்று சோவியத்தின் கடைசி அதிபராக இருந்த மிகைல் கார்பசேவ் கூறியுள்ளார்.

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இருந்தும் வெளியாகும் இங்கிலாந்து நாட்டு நாளிதழான தி ஈவினிங் ஸ்டேன்டர்ட் (இதனை தற்பொழுது ரஷ்ய நாட்டு கோடீசுவரரான அலெக்சாண்டர் லிபடேவ் வாங்கியுள்ளார்) நாளிதழின் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.

அப்பொழுது அமெரிக்காவிலும், ரஷ்ய உள்ளிட்ட உலக நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு குறித்துப் பேசிய கார்பசேவ், ஒரு புதிய முதலாளித்துவ முறையை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார்.

“சோசலிச அமைப்பிலும், இதுவரை இருந்துவந்த முதலாளித்துவ அமைப்பிலும் உள்ள சிறந்த மாதிரிகளை எடுத்துக்கொண்டு அவைகளை ஒன்றிணைத்து ஒரு புதிய முதலாளித்துவ முறையை உருவாக்க வேண்டும். சோசலிசத்திலிருந்து சமூக நீதியையும், சமத்துவத்தையும், அதே போல ஊக்கமளித்திடும் முதலாளித்துவ வழியையும் ஏற்றுக் கொண்டு அந்த புதிய முறையை உருவாக்க வேண்டும” என்று கார்பசேவ் கேட்டுக்கொண்டார். 

அமெரிக்காவும், ரஷ்யாவும் மட்டுமல்ல, தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்படாத நாடுகள் என்று எதுவும் இல்லை. இந்தச் சூழலில் ஒரு புதிய நிதி-அரசியல் அமைப்பை உருவாக்கும் மறுசீரமைப்பை (பெரஸ்ட்ரோய்கா) அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும் என்று கார்பசேவ் கூறினார்.