ஊட்டியில் ஏற்பட்ட திடீர் மண் சரிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட மலை ரயில் இன்று மீண்டும் இயக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சூறாவளி காற்றும் சுழற்றி அடிக்க, மரங்கள் வேரோடு பெயர்ந்து பறந்தன. சில மரங்களும் மலை ரயில் தண்டவாளத்தில் விழுந்தது. இதை தொடர்ந்து மலை ரயில் செல்லும் வழிகளில் மண் சரிவும் ஏற்பட்டு, தண்டுவாளம் சில இடங்களில் மூடப்பட்டு கிடந்தன. 

இதனால், கல்லாரில் இருந்து காந்திபுரம் வரை செல்லும் ஊட்டி மலை ரயில் மேட்டுப்பாளையத்தை தாண்டி சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரயில் ரத்து செய்யப்பட்டது. மலை ரயிலில் இயற்கை அழகை ரசித்தபடி செல்ல நினைத்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் பஸ் மூலம் ஊட்டிக்கு அனுப்பப்பட்டனர்.

நேற்று முன்தினம் இரவும் மலை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் இரண்டாவது நாளாக மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ரயில்வே ஊழியர்கள் மண் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நேற்று முழுமையடைந்தது.

இதையடுத்து மலை ரயில் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.