அரசியல் கட்சிகள் வாக்காளர்களைக் கவரும் வகையில் கறி விருந்து நடத்துவது, பிரியாணி உள்ளிட்டவற்றைப் போடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தேர்தல் தொடர்பாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். 

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது …

– மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக உள்ள மாவட்ட கலெக்டர் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி தேர்தல் விதிமுறைகளை எடுத்துரைக்க வேண்டும். 

பாமகவுக்கு அனுமதி இல்லை..!

– அனைத்து கட்சி கூட்டத்துக்கு தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க.. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பாரதீய ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய 11 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை மட்டுமே அழைக்க வேண்டும். 

– கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். 

– தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல் கட்சிகள் 4 கார்களுக்கு மேல் பயன் படுத்தக்கூடாது. 

– வாக்காளர்களுக்கு கறி விருந்து வழங்கக்கூடாது. 

– வாக்குக்காக பணம் அளிக்கக்கூடாது. 

ஆரத்தி எடுத்தால் பணம் தரக் கூடாது..!

– ஆரத்தி, குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல் போன்றவைகளுக்கு பணம் கொடுக்கக்கூடாது. 

– தேர்தல் விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகள் குறித்து உடனே தேர்தல் பார்வையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 

‘குழாய்’களுக்கு தடை ..!

– பிரசாரத்துக்கு கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. 

– வேட்பாளர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசக்கூடாது. 

– வேட்பாளர்களை ஆட்டோ போன்ற வாகனங்களில் அழைத்து வரக்கூடாது. 

இதுபோன்ற விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். 

சுவர் விளம்பரங்கள் அழி்ப்பு..

இதற்கிடையே, மதுரை பகுதியில் சுவர்களில் இடம் பிடிப்பதில் அரசியல் கட்சிகளிடையே கடும்போட்டி ஏற்பட்டு உள்ளது. தொகுதி பங்கீடு, வேட்பாளர் யார்? என்பது தெரியும் முன்பே தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஆங்காங்கே சுவர்களில் தேர்தல் சின்னங்களை வரைய தொடங்கி விட்டன.

மதுரையில் தி.மு.க.வினர் மு.க.அழகிரிக்கு ஓட்டு கேட்டு ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள் வரைந்துள்ளனர். மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் தனியார் சுவர்களில் அனுமதியின்றி கட்சி சின்னங்கள் வரையப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் சீத்தாராமனிடம் புகார்கள் வந்தன. இதையடுத்து தனியார் சுவர்களில் அனுமதி இன்றி வரையப்பட்ட கட்சி சின்னங்களை அழிக்க உத்தரவிட்டார். 

இதனால் மதுரை அண்ணாநகர், பழங்கா நத்தம், கோரிப்பாளையம் உள்பட பல பகுதிகளில் வரையப்பட்ட சின்னங்கள் அழிக்கப்பட்டன.