பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைக்கிறது. இதனால் காங்கிரசுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்குமா? என்பது குறித்து விரைவில் விஜயகாந்த் அறிவிக்கிறார்.

 

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் கூட்டணி அமைக்கும் முயற்சிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

 

தி.மு.க. கூட்டணியில் காங்கிரசும், அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., இந்திய கம்ïனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு ஆகிய கட்சிகளும் உள்ளன.

 

பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யாமல் இருக்கின்றன.

 

இந்த 2 கட்சிகளுக்கும், தங்கள் கூட்டணியில் இடம்பெறுமாறு 2 அணிகளுமே அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் இந்த 2 கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருப்பதை விரும்பவில்லை. “ஒரே உறைக்குள் 2 கத்தி இருக்க முடியாது” என்று இரு கட்சியைச் சேர்ந்தவர்களுமே வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.

 

தினந்தோறும் தகவல்கள்

 

இதனால் கூட்டணி பற்றி அறிவிப்பதில் இந்த 2 கட்சித் தலைவர்களும் திட்டவட்டமான எந்த முடிவையும் கூறவில்லை. இந்த நிலையில், பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணியில் சேருகிறது என்றும், தி.மு.க. கூட்டணியில் சேருகிறது என்றும் தினந்தோறும் தகவல்கள் உலா வருகின்றன.

 

தி.மு.க. கூட்டணியில் சேருவது பற்றி பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தி.மு.க. பொருளாளரும் அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.

 

அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி

 

இந்த நிலையில், அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து முடிந்து விட்டதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

 

பா.ம.க.வுக்கு 7 பாராளுமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டுவிட்டது என்று நேற்றிரவு அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது.

 

ஆனால் அந்த 2 கட்சிகள் தரப்பிலுமே இந்த செய்தியை உறுதிப்படுத்தவோ, மறுத்தோ யாரும் பேச தயாராக இல்லை. இந்த தகவலை மறுக்காத பட்சத்தில் இந்த தகவல் உறுதியானதாக இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

 

தனித்து போட்டியா?

 

காங்கிரஸ் கூட்டணியில் சேர விஜயகாந்திற்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டு தொடர்ந்து அது வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது பா.ம.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேருவதால் காங்கிரஸ் கூட்டணியில் சேருவதற்கு விஜயகாந்த் தீவிரமாக பரிசீலனை செய்வார் என்று தெரிகிறது.

 

இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் தே.மு.தி.க. இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு முடிவு எடுத்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அநேகமாக, காங்கிரஸ் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிடும் அல்லது தனியாகவே பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் என கூறப்படுகிறது.