பீகார் மாநில மக்களவைத் தேர்தலில் 26க்கும் அதிகமான இடங்களில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சரும், பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கான காங்கிரஸ் ஆய்வுக்குழு தலைவர் சுஷில்குமார்ஷிண்டே வெளியிட்டார்.

பீகாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், பீகாரில் காங்கிரசுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த எண்ணிக்கை போதாது என்று அதிருப்தி தெரிவித்த காங்கிரஸ், தங்களுக்கு மேலும் சில தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியது.எனினும், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது என லாலு பிரசாத் தெரிவித்தார்.

பீகாரில் லாலு காட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறி விட்டது. இதையடுத்து அங்கு அதிக தொகுதிகளில் போட்டியவுள்ளது.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் 26க்கும் அதிகமான இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

பீகாரில் கடந்த மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

பீகாரில் தங்களுக்கு 3 சீட்களை ஒதுக்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்த லாலு பிரசாத் யாதவுக்கு, ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது காங்கிரஸ்.

லாலுவுக்குப் பதிலடி தரும் வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 தொகுதிகளை மட்டுமே லாலு கட்சிக்கு வழங்கியுள்ள காங்கிரஸ், ராம் விலாஸ் பாஸ்வானுக்கு ஒரு தொகுதியையும் தரவில்லை.

ஜார்க்கண்ட்டில் மொத்தம் 14 தொகுதிகள் உள்ளன. இவற்றைப் பங்கிடுவது தொடர்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர்களுடன் காங்கிரஸ் பேச்சு நடத்தியது.

இறுதியில், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், மோர்ச்சா 5 தொகுதிகளிலும் போட்டியிட தீர்மானிக்கப்பட்டது. லாலு கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டது. பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை.

இதனால் அந்த கட்சி தனித்து போட்டியிடப்போடவதாக அறிவித்துள்ளது.