பயங்கரவாதத்தை ஒடுக்க இந்திய இராணுவத்தினரைக் கொண்டு உருவாக்கப்பட்டுவரும் சிறப்புப் படை இம்மாத இறுதிக்குள் பெங்களூருவில் நிலைநிறுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து, பயங்கரவாதத்தை ஒடுக்க தேச அளவில் தனி புலனாய்வு அமைப்பு உருவாக்கப்படுவதற்கு முடிவெடுக்கப்பட்டபோதே, பயங்கரவாதத்தை ஒடுக்க சிறப்பு இராணுவப் படை உருவாக்கி ஒவ்வொரு நகரத்திலும் நிலைநிறுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் 600 பேரைக் கொண்ட சிறப்புப் படை இம்மாத இறுதிக்குள் நிலைநிறுத்தப்படும் என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிதம்பரம், இந்திய இராணுவத்திலிருந்து வீரர்களைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த சிறப்புப் படை இரண்டு கட்டங்களாக மேம்படுத்தப்படும் என்றும், இராணுவத்தின் அனைத்து நிலைகளில் இருந்தும் வீரர்களும், அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட்டு 250 பேருடன் முதற்கட்டமாகவும், மேலும் 250 பேருடன் இரண்டாவது கட்டமாகவும் சேர்த்து உருவாக்கப்படும் இந்த சிறப்புப் படை இம்மாத இறுதியில் பெங்களூருவிற்கு வந்து சேரும் என்று கூறினார்.

பெங்களூவில் உள்ள இந்திய இராணுவத்தின் சிறப்புப் பிரிவிற்கு ஒரு நாள் பயணமாக வந்த அமைச்சர் சிதம்பரம், தற்பொழுது இந்த சிறப்புப் படையில் 100 வீரர்கள் உள்ளனர் என்றும், பயங்கரவாத தாக்குதல் எங்காவது நடந்தால் குறுகிய கால அவகாசத்தில் இப்படை அங்கு விரைந்து சென்று எதிர் நடவடிக்கையில் ஈடுபடும் என்று கூறினார்.