நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்வதில் ஒரு பொருள் இருக்கிறது எ‌ன்று தே.மு.தி.கதலைவர் விஜயகாந்த் சூசகமாகத் தெரிவித்தார்.
 

இருப்பினும் சில முக்கிய தொகுதிகளில் அவர் காங்கிரஸ் வேட்பாளர்கள ஆதரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

ம‌க்களவை‌த் தேர்தலை முன்னிட்டு தே.மு.தி.க. சார்பில் முதன்முதலாக தேர்தல் பிரசாரத்தை காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னி கோயிலில் தொடங்கிவைத்து அவர் பேசுகை‌யி‌ல், காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோயில்களுக்குப் பெயர் பெற்றது காஞ்சிபுரம். அதோடு அறிஞர் அண்ணா பிறந்த ஊர். அதனால்தான் இங்கு பிரசாரத்தைத் தொடங்கி உள்ளேன். 

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் நீங்கள் மாறி மாறி பார்த்துவிட்டீர்கள். இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி மத்தியில் கூட்டணி வைத்துக்கொண்டு இருந்தார்கள். கோடி கோடியாக கொள்ளை அடித்தார்கள். உங்களுக்கு ஏதாவது கொடுத்தார்களா? அல்லது உங்களுடைய வறுமை தீர்ந்ததா? 

தமிழ்நாட்டில் வற்றாத நதி எது என்றால் காவிரி. அந்த காவிரி நதி நீர் பிரச்சனையை இதுவரை தீர்த்து வைத்தார்களா? முல்லைப் பெரியார் அணையில் இருந்து ஒரு 10 அடி தண்ணீரை கூட்டிக் கொடுத்து இருந்தால்கூட தேனி பகுதியில் இருக்கின்ற 10 லட்சம் ஏக்கர் நிலம் நன்றாக பயன் அடைந்து இருக்கும்.

தேர்தலுக்குப் பணம் அளிக்க வந்தால், அவர்களிடமே அவர்கள் தரும் பணத்தைத் தூக்கி எறியுங்கள். பணத்தைப் பெற்றுக்கொண்டு வாக்களிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள். 

இதுவரை நான் எந்த கட்சியுடனும் செல்லவில்லை. இப்போது சொல்லுங்கள் நான் போகிறேன். தி.மு.க. கூட்டணிக்கு போக வேண்டுமா? என்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்று சொல்வதினால் ஜெயலலிதாவுக்கு கோபம் வரும். அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு செல்ல வேண்டுமா? சரி இரண்டு கட்சியுமே வேண்டாம். நான் சொல்கின்ற ஆளுக்கு ஓட்டு போடுவீர்கள் அல்லவா. நான் அடையாளம் காட்டுபவர்கள் யாராக இருந்தாலும் ஓட்டு போட வேண்டும்.

ஏன் இதையெல்லாம் கேட்கிறேன் என்றால் இந்த விஜயகாந்த் என்ன முடிவு எடுப்பார்? என்று எல்லோருக்கும் புரியாமல் இருக்கிறது. நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வதிலும் ஒரு பொருள் இருக்கிறது. ஆனால் என்னுடைய மக்களை நான் நல்லபடியாக வாழ வைக்காமல் இந்த விஜயகாந்த் போகவே மாட்டான்.

காசுக்காக ஆசைப்பட்டுக்கொண்டு இருந்தால் நான் இப்படியெல்லாம் வந்திருக்க மாட்டேன். என்றைக்கோ சூட்கேசை வாங்கிக்கொண்டு நான் பாட்டுக்கு போய்க்கிட்டு இருந்திருப்பேன். உங்களுக்காகத்தான் நான் போராடுகிறேன். நீங்கள் அவர்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாயை வங்கிக்கொண்டு ஓட்டுப் போட்டால் என்னதான் செய்யமுடியும்? வேறு வழியில்லாமல், “சரி போய் தொலைகிறது, நாமும் கூட்டணிக்கு போய் விடுவோம். இந்த மக்களை திருத்த முடியாது” என்று நினைப்பேன்.

இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக தேர்தலை புறக்கணிக்கலாம் என முதலில் அறிவித்தேன். ஆனால், மற்ற கட்சிகள் பதவி, அதிகாரத்தைத்தான் எதிர்பார்த்துள்ளன. கச்சத் தீவில் அந்தோணியார் மாதா கோயிலை வழிபடவும், மீன் வலைகளை காயவைக்கவும் தமிழக மீனவர்களுக்கு உரிமை உள்ளது. அதைக்கூட இந்திய அரசால் காப்பாற்ற முடியவில்லை. கச்சத் தீவை தாரை வார்த்துவிட்டனர். தமிழகம் முதலிடத்தில் உள்ளது என கூறுகின்றனர். ஆனால், வறுமையிலும், வேலையில்லாத் திண்டாட்டத்திலும் தான் முதலிடத்தில் உள்ளது.

23 முதல் 25ஆம் தேதி வரை வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது. அதன்பின் 26ஆம் தேதி முதல் கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறேன். தமிழர்களும், தமிழகமும் சிறப்பான இடத்தைப் பெற நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வாக்களியுங்கள் என்றுவிஜயகாந்த் கூ‌றினா‌ர்.