பிளஸ் 2 தேர்வு தாள்கள் இந்த ஆண்டு விரைவாக திருத்தப்பட்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அறிவக்கப்படும் என தமிழ்நாடு அரசு தேர்வாணைய தலைவர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2ம் தேதி ஆரம்பித்த பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று முடிவடைந்தது. சுமார் ஏழு லட்சம் மாணவ மற்றும் மாணவியர்கள் எழுதிய இத்தேர்வு முடிவை இம்முறை விரைவாக வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இது இருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு தேர்வாணைய தலைவர் வசந்தி ஜீவானந்தம் கூறுகையில்,

விடைத்தாள் திருத்தும் பணி வரும் ஏப்ரல் 1 அல்லது 2ம் தேதி தொடங்கும். தமிழ்நாடு முழுவதும் 42 மையங்களில் விடைத்தாள் திருத்தப்படுகிறது. 56 லட்சம் விடைத்தாள்கள் திருத்த வேண்டியுள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும்.

விடைத்தாள்கள் 10 நாட்களில் திருத்தி முடிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள விடைத்தாளுக்கு ஏற்ப ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். சென்னையில் 2 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தப்படுகிறது. கடந்த ஆண்டு மே 9ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்தாண்டு அதை விட முன்னதாக வெளியிட இருக்கிறோம்.

இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். முன்கூட்டியே தேர்வு முடிவை வெளியிடும் சூழ்நிலை இருக்கும்பட்சத்தில் பிழை இல்லாமலும் வெளியிட வேண்டும் என்பது தேர்வுத்துறை கடமையாகும். எனவே அவற்றை எல்லாம் பார்த்து தான் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றார் வசந்தி ஜீவானந்தம்.