தமிழகத்தில் நடைபெறும் லோக்சபா தேர்தலில் திமுகவுக்கு மட்டும் ஆதரவு அளிப்பது, காங்கிரஸை எதிர்ப்பது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முடிவு செய்துள்ளது.

இந்த அமைப்பின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் கோவையில் நடந்தது. 

அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..

tntj-1கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடு அளிக்கும் ஆணையம் அமைத்ததற்காக அதிமுக கூட்டணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஜெயலலிதா அமைத்த ஆணையம் பயனற்றுப் போனது.

திமுக தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர் தனி இடஒதுக்கீடு கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு வீரியமிக்க போராட்டங்களை நடத்தியது. இதன் விளைவாக திமுக அரசு முஸ்லிம்களுக்கு (3.5)மூனறை சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது.

இது போதுமானதாக இல்லாவிட்டாலும் இந்த அளவிற்காவது கிடைத்ததே என்பதற்காக எதிர்வரும் தேர்தலில் திமுகவை ஆதரிப்பது என்று முடிவு செய்து முதல்வரிடம் எழுத்து மூலமான ஆதரவை டிஎன்டிஜே தெரிவித்தது.

 

tntjlet1tntjlet2ஆனாலும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஏராளமான வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதை எதிர்த்தும் டிஎன்டிஜே பல்வேறு போராட்டங்களை நடத்தியது.

ஆரம்பத்தில் இதை அலட்சியம் செய்த முதல்வர் முஸ்லிம் மக்களின் கடும் அதிர்ப்தியைக் கண்ட பின் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை ஒப்புக் கொண்டு சரி செய்வதாக உறுதியளித்தார். இதன் பின்னர் வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகளிலும் உயர் கல்வியிலும் மூனறை சதவீதம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் கடந்த ஆறு மாதங்களில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி சரி செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கையையும் முதல்வர் கண்டு கொள்ளவில்லை. எனவே இடஒதுக்கீடு சட்டம் அமுலுக்கு வந்த பின் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி சரி செய்யப்படாத காரணத்தால் தீவிரமான ஆதரவை திமுகவிற்கு அளிக்க இயலாது. அதே சமயம் இடஒதுக்கீட்டை தற்சமயம் நடைமுறைப்படுத்தியதால் திமுகவிற்கு தார்மீக ஆதரவளிப்பது என்று தீர்மானிக்கிறோம்.

1. கடந்த காலத்தில் செய்யப்பட்ட அநீதியைச் சரி செய்வதாக காலக்கெடுவுடன் எழுத்து மூலமான உறுதிமொழி அளித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில்லறைப் பிரச்சனைகளுக்காக முஸலிம்களின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்கினால் திமுகவை தீவிரமாக ஆதரிப்பது என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.

2. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கடந்த தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக தெரிவித்தது. ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் முழுமையாக இருந்தும், இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் கட்சிகள் துணைக்கு நின்றும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க மறுத்து முஸ்லிம்களை ஏமாற்றியது.

tntjpodhukkulu-6அமெரிக்காவுடன் அடிமை சாசனம் செய்ய தீவிர முயற்சி செய்த மத்திய அரசு முஸ்லிம்களை வஞ்சித்து விட்டது. இப்போதய தேர்தல் அறிக்கையில் கூட முஸ்லிம்களின் இடஒதுக்கீடு குறித்து எதையும் குறிப்பிடவில்லை. அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தம், இஸ்ரேலுடன் இராணுவ உறவு, கலவரத் தடுப்பு காவல்படை அமைப்பதாக அளித்த வாக்கை மீறியது.

பாபர் மசூதிக்கு நியாயம் வழங்க மறுத்தது என்று அடுக்கடுக்கான அநியாயங்களைச் செய்து வந்ததுடன் கடைசியாக இடஒதுக்கீடு விஷயத்திலும் அநீதி செய்துள்ளது. எனவே வரும் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 15 தொகுதிகளிலும் காங்கிரசிற்கு ஆதரவு அளிப்பதில்லை என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.

திருமா.வுக்கும் ஆதரவு கிடையாது..

3. விடுதலைச் சிறுத்தை அமைப்பினர் முஸ்லிம் செல்வந்தர்களையும் வணிகர்களையும் நில உரிமையாளர்களையும் மிரட்டி அராஜகம் செய்து வருவதாலும் அவர்களை திருமாவளவன் அடக்கி வைக்காத காரணத்தாலும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் விடுதலைச் சிறுத்தைகள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். எனவே விடுதலைச் சிறுத்தைகளை ஆதரிப்பதில்லை என்றும் இப்பொதுக் குழுவில் தீர்மானிக்கப்படுகிறது. 

4. அதிமுகவைப் பொறுத்தவைர முஸ்லிம்களின் எதிரியாக பார்க்கப்பட்டாலும் இடஒதுக்கீடு ஆணையம் அமைத்ததால் அதிமுகவிற்கு முஸ்லிம்கள் வாக்களித்தனர்.

திமுகவின் கோட்டையான சென்னையில் அதிக இடங்களை அதிமுக பெற்றதற்கும் பலமான எதிர்க்கட்சியாக அமைந்ததற்கும் முஸ்லிம்களே காரணம். இந்த விசுவாசம் இல்லாமல் முஸ்லிம்களின் முதுகில் குத்தும் வகையில் பயங்கரவாதி மோடியை அழைத்து விருந்தளித்து முஸ்லிம்களின் ஆதரவு தேவையில்லை என்று சொல்லாமல் சொன்ன ஜெயலலிதாவையும் அவரது கூட்டணியையும் ஆதரிப்பதில்லை.

பாமகவுக்கும் ஆதரவு கிடையாது..

5. பாமக தொடர்ந்து முஸ்லிம் விரோதியாகச் செயல்படுவதாலும் இலங்கைப் பிரச்சனையை மையமாக வைத்து முஸ்லிம்களுக்கு தீவிரவாதிப் பட்டம் சுமத்தியதாலும் கடந்த தேர்தலிலும் இந்த தேர்தலிலும் முஸ்லிம்களுக்கு ஒரு இடம் கூட தராத காரணத்தினாலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விஷயத்தில் புதுவையில் உள் வேளை செய்த காரணத்தினாலும் பமகாவை ஆதரிப்பதில்லை என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. 

விஜயகாந்த்துக்கும் ஆதரவு கிடையாது..

6. விஜயகாந்தைப் பொறுத்த வரை அவர் ஆளும் கட்சியாகவோ எதிர்க் கட்சியாகவோ இருக்கவில்லை. அவரை எடைபோட அவர் நடித்த சினிமாக்கள் தான் உள்ளன. அவரது சினிமாக்களில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கின்ற போக்கு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதால் அவரையும் அவரது கட்சியையும் ஆதரிப்பதில்லை என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.

புதுவையில் மட்டும் காங்.குக்கு ஆதரவு..

7. புதுவையில் மட்டும் புதுவை மாநில அரசு இடஒதுக்கீட்டிற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாலும் ஆணையம் அமைத்ததாலும் விரைவில் இடஒதுக்கீட்டை அளிப்பதாக முதல்வர் நேரடியாக புதுவை நிர்வாகிகளிடம் வந்து வாக்குறுதி அளித்ததாலும் புதுவையில் மட்டும் காங்கிரசிற்கு ஆதரவு அளிப்பதாக இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. 

மனித நேயக் கட்சி எங்கு நின்றாலும் எதிர்ப்போம்…

8. மனித நேய மக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. 

திமுக போட்டியிடாத தொகுதிகளில் காங்கிரஸ்-அதிமுக அல்லது காங்கிரஸ்-பாமக அல்லது காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் அல்லது காங்கிரஸ்-மதிமுக, அல்லது விடுதலைத் சிறுத்தைகள்-பாமக போட்டியிடும் போது இரண்டு வேட்பாளர்களும் சம நிலையில் இருந்தால் யாரையும் ஆதரிக்காமல் இருக்க வேண்டும்.

இருவரில் ஒருவரை விட மற்றவர் முஸ்லிம்களுக்குப் பயன்படுவார் என்று மாவட்ட நிர்வாகம் தக்க காரணங்களுடன் தெரிவித்தால் மாநில நிர்வாகம் பரிசீலித்து அதனை ஏற்றுக் கொள்ளும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தட்ஸ் தமிழ்