1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்திற்கு ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெகதீஷ் டைட்லர் கூறியுள்ளார். 

சீக்கியர்களுக்கு எதிரான வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாற்றப்பட்டிருந்த ஜெகதீஷ் டைட்லர், அவ்வழக்கிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டார். 

இதற்கு, இவ்வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுக் கழகத்தின் செயல்பாட்டில் மத்திய அரசு தலையிட்டதே காரணம் என்று பல்வேறு சீக்கிய அமைப்புகள் குற்றம் சாற்றியிருந்தன. 

இதனையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்த டைட்லருக்கும், சஜ்ஜான் குமாருக்கும் காங்கிரஸ் அனுமதி மறுத்தது. 

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள டைட்லர், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்கு ஆயிரம் முறை அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளார். 

நான் அமைச்சராக இருந்தபோது, ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்திற்கு எதிராக என்ன நடந்ததோ அதற்காக நான் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்ன நடந்ததோ அது வெட்கக்கேடானது” என்றும் கூறியுள்ளார். 

நிலைமையை கட்டுப்படுத்தியிருக்க வேண்டிய ஆளுநரும், அரசு நிர்வாகமும் அந்த நேரத்தில் கட்டுப்டுத்தத் தவறிவிட்டன என்பதனை அந்த மக்களிடம் தான் சொல்லிக்கொள்ள விரும்புவதாகவும் டைட்லர் கூறியுள்ளார்.