பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் மொத்தம் 204 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவுக்கு தேர்தல் ஆணையம்உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த துணை தலைமைத் தேர்தல் ஆணையர் ஆர். பாலகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 58 வாக்குச்சாவடிகளில் வரும் 28 ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று கூறினார்.
பீகார் மாநிலத்தில் 146 வாக்குச் சாவடிகளில் எப்போது மறுவாக்குப்பதிவு என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
நேற்றைய 2 வது கட்ட தேர்தலில் திரிபுராவில் அதிகபட்சமாக 80 விழுக்காடும், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் குறைந்தபட்சமாக தலா 44 விழுக்காடு வாக்குகளும் பதிவானதாகக் கூறிய அவர், சராசரி வாக்குவிகிதம் 55 விழுக்காடு என்றார்.
ஒருசில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிறிது நேரம் வாக்குப்பதிவு தடைபட்டதாகவும், மற்றபடி நேற்றைய தேர்தல் திருப்தியான முறையில் முடிந்துள்ளதாகவும் பாலகிருஷ்ணன் கூறினார்.