குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரங்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை மீதான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் விரைவு நீதிமன்றத்தை நிறுவி நாள்தோறும் இந்த வழக்கு விசாரணையை நடத்தி விரைவில் முடிக்குமாறும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் வலியுறுத்தியுள்ளது.

நீதியரசர் அரிஜித் பசாயத் தலைமையிலான பெஞ்ச் இது குறித்து கூறுகையில் கலவரங்கள் நடைபெற்று 7 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் தினசரி இந்த வழக்கு விசாரணையை நத்துவது கட்டாயமாகிறது என்று கூறினர்.

மத்தியப் புலானாய்வுக் கழக முன்னாள் இயக்குனர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு இந்த வழக்கு விசாரணைகள் குறித்த முடிவுகளை 3 மாதங்களுக்கு ஒரு முறை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கோரியுள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உட்பட 64 பேர் மீதான விசாரணையை சிறப்பு விசாரணைக் குழு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.