டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கு பன்றி காய்ச்சல் இல்லை அவர்களுக்கு சிகிச்சை அளித்த டெல்லி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரு ஆண்டுகளுக்கு முன்பு, உலக நாடுகளை அச்சுறுத்திய பறவைக்காய்ச்சல் நோய் போன்று, தற்போது பன்றிக் காய்ச்சல் நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கானோரை பலிகொண்ட இந்த கொடிய நோய், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, நியூசிலாந்து, இஸ்ரேல், ஸ்பெயின், இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற 12 நாடுகளில் பரவியுள்ளது.
வெளிநாட்டுப் பயணிகள் மூலம் இந்நோய் பரவுவதை தடுக்க, அனைத்து நாட்டு விமான நிலையங்களிலும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் மும்பை, டெல்லி, சென்னை போன்ற முக்கிய நகரங்களிலுள்ள விமான நிலையங்களிலும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் வெளி நாடுகளில் இருந்து டெல்லி வந்த 6 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் இருப்பதற்கான அறிகுறி தெரிந்தது. உடனே அவர்கள் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லியில் உள்ள ராம்மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இங்கு அவர்கள் 3 நாள் தங்க வைக்கப்பட்டனர். பல விதமான சோதனைகள் நடத்தப்பட்டன. ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இவர்களில் 5 பேருக்கு பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.
ஒருவர் மட்டும் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.
இதுதொடர்பாக, சுகாதார துறை செயலாளர் வினீத் சவுத்ரி கூறுகையில், “பன்றிக்காய்ச்சல் நோய் இந்தியாவில் நுழைய விடாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உடல் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்காக அனைத்து விமான நிலையங்களில் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 20 ஆயிரம் பயணிகளுக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் இதுவரை யாருக்கும் பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை” என்றார்