ஜித்தாவில் முதன் முறையாக மகளிருக்காக மகளிரே நடத்திய “மகளிர் உலகம்” நிகழ்ச்சி இந்திய துணை தூதரக வளாகத்தில், பேராசிரியை பர்வீன் சுல்தானா தலைமையில் நடந்தது.

சமூக கல்விவளர்ச்சி அமைப்பு சார்பாக கடந்த வியாழனன்று இந்த பல்சுவை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. 

இந்த நிகழ்ச்சியை, ஜித்தாவில் உள்ள இந்திய துணைத்தூதர் மனைவி சுரையா சயீத் அஹ்மத் பாபா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 

தில்சாத் அக்பர் பாட்சா மற்றும் லத்தீபா முபாரக் ஆகியோர் இந்த அமைப்பு துவக்கப்பட்டதின் நோக்கத்தை பட்டியலிட்டனர்.

மும்தாஜ் சீனி அலி, சுமையா, ஜெயஸ்ரீ மற்றும் பர்ஹத்துன்னிசா (இந்தியப் பன்னாட்டு பெண்கள் பள்ளியின் துணை முதல்வர்) ஆகியோர் பெண்களும் இஸ்லாமிய கலாச்சாரமும், பெண்களும் தமிழ் கலாச்சாரமும் மற்றும் பெண்களும் கல்வியும் ஆகிய தலைப்புகளில் முறையே பல்வேறு உதாரணங்களுடன் தனது கருத்துக்களை எடுத்துரைத்தனர். 

இதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய பேராசிரியை பர்வீன் சுல்தானா இன்றைய பெண்களின் நிலை, ஒழுக்கம், சிந்தனை சீரமைப்பு, புறம் பேசுதல் மற்றும் கல்வி மேம்பாடு குறித்து பேசினார்.

பெண்களுக்கான அறிவுத் திறன் போட்டி, செய்கை பார்த்து விடையளி, அரபி பேசினால் அழகிய பரிசு போன்ற விளையாட்டுக்கள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.

அதுபோல் சிறார்களுக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 

ஜித்தா இந்திய பெண்கள் பன்னாட்டு பள்ளியில் தமிழ் மொழி படிக்கும் மாணவிகளுக்கிடையே “அம்மா” என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது, இதில் வெற்றிப்பெற்ற மூன்று மாணவிகளுக்கு மேடையில் பரிசுகள் வழங்கப்பட்டன. 

நிகழ்ச்சியை தமிழ் ஆசிரியை மைதிலி மற்றும் ஹசீனா பேகம் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.