வடகொரியா பூமிக்கு அடியில் அணுஆயுத சோதனை நடத்தியிருப்பது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

northkoreaபுதுடெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஏ.கே. ஆண்டனி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவைப் பொருத்தவரை அணுஆயுதப் பரவலுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்று கூறினார்.

தற்பாதுகாப்புக்காகவும், தங்களின் அணுஆயுதம் தொடர்பான வல்லமையை வெளிப்படுத்தவும், வெற்றிகரமாக அணுஆயுத சோதனை நடத்தியிருப்பதாக வடகொரியா அறிவித்திருப்பது குறித்து இந்தியாவின் கருத்து என்ன என்று ஏ.கே. ஆண்டனியிடம் கேட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல்முறையாக வடகொரியா அணுஆயுத சோதனை நடத்திய போது, உலக நாடுகள் கண்டனம் வெளியிட்டதுடன், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டதை ஆண்டனி சுட்டிக்காட்டினார்.

வடகொரியாவின் அணுஆயுத சோதனையால், இந்தியாவின் பாதுகாப்பு மேலும் சவால் நிறைந்ததாக உள்ளது என்றும், அண்டை நாட்டில் இதுபோன்ற நிலைமையால் இந்தியா மிகுந்த கவலை கொள்கிறது என்றும், இடைவிடாத கண்காணிப்பு அவசியமாகிறது என்றும் அவர் கூறினார்.

தேசிய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதே தமது உயர் முன்னுரிமை நடவடிக்கையாக இருக்கும் என்றும் ஆண்டனி குறிப்பிட்டார்.