ms07சென்னையில் கடலில் படகு மூழ்கியதில் 15 பேர் மூழ்கினர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர்.

மெரீனா கடற்கரையைப் போலவே, எலியாட்ஸ் பீச்சிலும் பெருமளவு மக்கள் கூட்டம் கூடுவது வழக்கம். நேற்றும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

அங்கு மீனவர்கள் சிலர் மீன் பிடி படகில் மக்களை கடலுக்குள் சவாரி அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அதன் ஆபத்தை அறியாமல் கடற்கரைக்கு வந்தவர்களும் பணம் கொடுத்து படகுப் பயணம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் பைபர்கிளாஸ் படகு ஒன்றில், 15 பேர் சென்றனர். அந்தப் படகு போய் விட்டுத் திரும்பியதும் அடுத்து ஒரு 15 பேர் சவாரி சென்றனர். அந்தப் படகு கடலுக்குள் போய் விட்டு கரைக்குத் திரும்பும்போது திடீரென நீரில் கவிழ்ந்து விட்டது.

பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி கோவிலுக்குப் பின்புறம் இந்த சம்பவம் நடந்தது. இதனால் கடற்கரையில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக கரையில் இருந்த மீட்புப் படையினர் கடலில் குதித்து நீந்திச் சென்று அனைவரையும் பத்திரமாக மீட்டு விட்டனர்.

நான்கு பேர் மட்டும் ராட்சத அலையால் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களையும் போராடி மீட்டு விட்டனர்.

3 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததால் அவர்களை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.