பிளஸ் டூ தேர்வில் தமிழை ஒரு பாடமாகப் படித்து மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 10 மாணவ-மாணவியருக்கு ரூ. 3.40 லட்சம் பரிசு வழங்கிய முதல்வர் கருணாநிதி, அவர்கள் எந்த கல்லூரியில், எந்த படிப்பிலும் சேர்ந்து படித்தாலும் அதற்கான அனைத்து செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்பதற்கான கடிதங்களையும் வழங்கினார்.

பிளஸ் டூவில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்து, அதிக மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ- மாணவியருக்கு பி.இ மற்றும் எம்பிபிஎஸ் உட்பட அவர்கள் விரும்பிப் பயிலும் உயர் படிப்புக்கான செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்கும் திட்டம் 1996ம் ஆண்டில் முதல்வர் கருணாநிதியால் அறிமுகம் செய்யப்பட்டது.

பரிசுத் தொகையும் உயர்வு…

மேலும் மாநில அளவில் முதலிடம் பெறுபவருக்கு இதுவரை ரூ. 15,000 பரிசும் வழங்கப்பட்டு வந்தது. இதை ரூ. 50,000 ஆக உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இரண்டாம் இடம் பெறுபவோருக்கான பரிசுத் தொகை ரூ. 12,000லிருந்து ரூ.30,000 ஆகவும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையான ரூ.10,000த்தை ரூ. 20,000 ஆகவும் உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதை இந்த ஆண்டே நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ள தமிழக அரசு 2009ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1,183 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்றுள்ள

  • பா.ரமேஷ்,
  • எம்.லிங்கேஸ்வரன்,
  • மாணவி கே.சி.சிஞ்சு,
  • ஆ.பிரவீன்

ஆகியோருக்கு தலா ரூ.50,000க்கான காசோலைகளை வழங்கினார்.

அதே போல 1,200க்கு 1,182 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்த

  • எஸ்.ஐஸ்வர்யா,
  • பி.சுகவனேஷ்

ஆகியோருக்கு தலா ரூ.30,000த்துக்கான காசோலைகளையும்.

1,200க்கு 1,181 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ள

  • ஜஸிமா சுலைகா,
  • யாழினி,
  • எம்.வைத்தீஸ்வரன்,
  • எம்.மீரா ரஷீபா

ஆகிய நால்வருக்கும் தலா ரூ. 20,000த்துக்கான காசோலைகளை முதல்வர் கருணாநிதி கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் நேரில் வழங்கினார்.

இவர்கள் எந்த கல்லூரியில், எந்த பட்டப்படிப்பில் சேர்ந்து படித்தாலும், அதற்குரிய முழு செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்பதற்கான கடிதத்தையும் வழங்கி, வாழ்த்தினார்.