இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் “கெடரெக்ட் ” எனப்படும் கண் நோயின் தாக்கத்திற்கு உள்ளான பலருக்கு சவுதி அரேபியாவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டர் அமைப்பொன்றின் உதவியுடன் இலவச சத்திர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாக்கிஸ்தானைச் சேர்ந்த 8 வைத்திய நிபுணர்கள் உட்பட 25 பேரைக் கொண்ட மருத்துவர் குழுவொன்று காத்தான்குடியில் ஒரு வார காலம் தங்கியிருந்து இந்த சிகிச்சையை வழங்கியது.
இலங்கையில் இந்த சிகிச்சை பெறுவதென்றால் ஒருவர் குறைந்தது 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய நிலையில் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை முகாம் பலனளிக்கும் வகையில் அமைந்திருந்தது.
பார்வை இழப்பை தடுக்கும் வகையில் ஆசியாவின் பல பகுதிகளிலும் இப்படியான வைத்திய முகாம்களை நடத்திவருவதாக மருத்துவர் குழுவைச் சேர்ந்த பகுர்தீன் குறிப்பிடுகின்றார்.
முஸ்லிம்கள் மட்டுமின்றி கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களைச் சேர்ந்த மூவின மக்களும் இந்த முகாமில் சிகிச்சை பெற்றுள்ளனர்.