மாப்பிள்ளை வீட்டார் திடீரென கூடுதல் வரதட்சணை பணம் கேட்டதால் கவலை அடைந்த மணமகள் கல்யாணத்திற்கு முதல் நாளன்று தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையை அடுத்த கொட்டி வாக்கத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது 2வது மகள் சித்ரா. சில ஆண்டுகளுக்கு முன்பு சித்ரா பத்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அவரது ஆசிரியர் மோகனுக்கும், அவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினர். இதைப் பார்த்த சித்ராவின் பெற்றோர் இருவருக்கும் கல்யாணம் செய்ய தீர்மானித்தனர். மோகனின் குடும்பத்தினரும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், குமார் திடீரென உடல் நலக்குறைவால் இறந்து போனார். மோகனுக்கும் அரசு பள்ளியில் வேலை கிடைத்தது. மோகனைப் போல ஆசிரியையாக வேண்டும் என்று விரும்பி பி.எட் படித்து வந்த சித்ராவும் படிப்பை முடித்தார்.

இந்த நிலையில் இவர்கள் இருவரின் திருமணமும் இன்று நடப்பதாக இருந்தது. இந்த நிலையி்ல் நேற்று திடீரென சித்ரா தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். அவர்களிடம் சித்ராவின் தாயார் சுந்தரி புகார் கொடுத்தார். அதில், அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பணியில் மோகன் சேர்ந்த பின், கூடுதலாக பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால், எனது மகள் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனைவரும் சிந்திக்க வேண்டும்

தாய்மார்களே!

மணமுடிக்க வேண்டிய மகன்கள் உங்களுக்கிருந்தால் அவர்களுக்காக வரதட்சணை வாங்காமல் மணமுடித்துக் கொடுப்பதுதான் உங்களுக்கு நன்மையானது. பெருமைக்கோ பொருளுக்கோ ஆசைப்பட்டு வரதட்சணை வாங்குவது உங்களுக்கு நன்மை பயக்கும் என்று நினைக்காதீர்கள்.

வரதட்சணை எனும் கொடும் பாவத்தின் பின்விளைவு, ஒரு தலைமுறையோடு முடிந்து விடாது. அவர்கள் தங்கள் மகன்களுக்கு வாங்கியதுபோல், தங்கள் மகள்களுக்குக் கொடுத்ததுபோல், பதின்மடங்கு அவர்களின் பேத்திகளுக்குக் கொடுக்க வேண்டியதிருக்கும். பெருமைக்கோ பொருளுக்கோ ஆசைப்பட்டு தாய்மார்கள் வாங்கும் வரதட்சணையினால் பெருமளவு பாதிக்கப்படப் போவது அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள்தாம். தங்களின் பிள்ளைகளைப் பிற்காலத்தில் துன்பத்திற்கு உள்ளாக்குவதுதான் தாய்மார்களின் விருப்பமா? அது எவ்வகையில் அவர்களுக்கு நன்மை தரும்?

பிள்ளைகளைப் பெற்றெடுத்தத் தந்தையரே!

“வாங்கு வரதட்சணை” என்று உறவுகள் ஒன்றுகூடி ஆசைகாட்டலாம். “மாட்டேன்” என்று மறுதலிப்பதுதான் நல்ல தந்தைக்கு அழகு. உறவுகளில் எதுவும் மறுமையில் உங்கள் உதவிக்கு வராது. மகனுடைய கத்னாவிலிருந்து பட்டதாரியாக்கிய படிப்புச் செலவு வரை கணக்கிட்டு, வரதட்சணையாகக் கேட்கும் வியாபாரி ஆகிவிடாமல் பிள்ளைகளுக்கானப் பொறுப்புகள் அனைத்தையும் சுமந்து வளர்த்த உண்மையான தந்தையாக ஒவ்வொரு தந்தையும் திகழ வேண்டும்.

எதிர்கால மணமகன்களே!

மனைவியாலும் மனைவியின் குடும்பத்தாராலும் உளமார மதிக்கவும் நேசிக்கவும்பட வேண்டுமாயின், இஸ்லாம் வெறுக்கும் வரதட்சணையை ஒவ்வொரு மணமகனும் வெறுத்து, மறுத்து விடுவதுதான் ஒரே வழியாகும்.

திருமணத்திற்காகக் காத்திருக்கும் அருமைச் சகோதரிகளே!

தனது வருங்காலக் கணவன், சில இலட்சங்களுக்கும் பல பவுன்களுக்கும் விற்கப்பட்ட கடைச்சரக்காக இருப்பதை எந்தப் பெண்தான் விரும்புவாள்? தனது வருங்காலக் கணவனைத் தேர்ந்தெடுக்கும் பொழுது மணமகள்கள் ஆழ்ந்து சிந்தித்துக் கொள்ளட்டும். மணமகன் பணக்காரனாக இருக்க வேண்டியதில்லை; நல்ல பண்புகளுக்குச் சொந்தக்காரனாக இருந்தால் போதும்.