சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்,
  • ஸ்ரீபெரும்புதூர்,
  • பிள்ளைப்பாக்கம்,
  • மடிப்பாக்கம்,
  • நேமம்,
  • மாதவரம்,
  • போரூர்

ஆகிய ஏரிகளில் இருந்தும் சென்னை நகருக்கு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் கொள்ளவு முன்பை விட தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏரிகளில் எப்போதும் தண்ணீர் இருப்பதால் தூர்வாருவது கஷ்டம். எனவே இந்த ஏரிகளின் கரையை வலுப்படுத்த குடிநீர் வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.33 கோடி வழங்கப்பட்டுள்ளது. நீர் கசிவை தடுக்கவும், கரையை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், மடிப்பாக்கம், நேமம், மாதவரம், போரூர் ஆகிய ஏரிகளில் இருந்தும் தண்ணீரை எடுத்து சென்னை மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வீராணம் ஏரியில் தற்போது தண்ணீர் இல்லை என்றாலும் அதன் கரைகளை பலப்படுத்த முடியுமே தவிர தூர்வார வாய்ப்பில்லை.
ஏரிப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்பவர்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சட்டமும் இயற்றப்பட்டுள்ளது என்றாலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது அரசியல் கட்சிகளும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பிரச்சினை ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

மீண்டும் நகராட்சியிடம் கொடைக்கானல் ஏரி:

இந் நிலையில் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்டும் கொடைக்கானல் நகருக்கு அழகு சேர்க்கும், கொடைக்கானல் ஏரியின் கட்டுப்பாடு 70 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நகராட்சியின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

7.5.1951ம் ஆண்டு வரை கொடைக்கானல் ஏரி நகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. ஆனால், 8.5.1951 அரசாணையின்படி கொடைக்கானல் ஏரியின் கட்டுப்பாடு மீன் வளத்துறைக்கு 10 ஆண்டுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏரியின் கட்டுப்பாடு மீன் வளத்துறை வசமே இருந்து வந்தது.

இந்நிலையில் உலக புகழ் பெற்ற கொடைக்கானல் ஏரியின் சுற்றுச் சூழல் மற்றும் அழகை பாதுகாக்கும் பொருட்டு ஏரியின் முழு கட்டுப்பாட்டையும் நகராட்சி வசம் கொண்டு வர கொடைக்கானல் நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மான நகல் துணை முதல்வர் ஸ்டாலினிடம் கொடைக்கானல் நகரமன்றத் தலைவர் முகமது இப்ராஹிமால் வழங்கப்பட்டது.

இது குறித்து ஆய்வு செய்த தமிழக அரசு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 125 (1) கீழ் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சொந்தமானது என்பதன் அடிப்படையில் கொடைக்கானல் ஏரியின் கட்டுப்பாட்டை நகராட்சி வசம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளது.

மீன் வளர்த்தல் மற்றும் மீன் பிடித்தல் ஆகியவை மீன் வளத்துறை வசமே தொடர்ந்து இருக்கும்.

இது குறித்து நகர மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம் கூறுகையில்,

இந்த நடவடிக்கையை எடுத்த துணை முதல்வர் ஸ்டாலினுக்கு கொடைக்கானல் மக்கள் சார்பில் நன்றி சொல்ல கடமைப்ப்பட்டுள்ளேன்.

இனி கொடைக்கானல் ஏரியில் படகுகளை இயக்கப் பதிவு செய்வது மற்றும் உரிமம் அளிப்பதால் கிடைக்கும் வருமானத்தில் 90 சதவீதம் நகராட்சிக்கும், 1 சதவீதம் மீன் வளத்துறைக்கும் பிரித்து வழங்கப்படும்.

இதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலிருந்து கொடைக்கானல் நகரில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள், குறிப்பாக சாலை வசதிகள், மின் விளக்கு வசதி, பூங்காக்கள் அமைத்து நகரை மேலும் அழகுப்படுத்துதல், குடிநீர் வசதி ஆகியன மேற்கொள்ளப்படும்.

Chennai_11ஏரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் சுற்றுச் சூழலும், அழகை கூட்டும் நடவடிக் கைகளும் தொடர்ந்து எடுக்கப்படும் என்றார்.