கணினிகளுக்கு புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இது கூகுளின் ‘குரோம் உலாவி’-யை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் என்று கூகுள் இணையதள செய்திகள் தெரிவித்துள்ளன.
இது குறித்த அறிவிப்பை கூகுள் நிறுவனம் தனது சொந்த வலைப்பதிவில் இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குரோம் உலாவியை கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்தது. கூடுதல் சக்தி வாய்ந்த இணைய கட்டளைகளுக்கு பயன்படும் கருவி என்று இதனை அப்போது கூகுள் நிறுவனம் வர்ணித்தது.
தற்போது இந்த குரோம் உலாவி என்ற இந்த 9 மாதகால புதிய உலாவியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் புதிய ஆபரேட்டிங் சிஸ்டத்தை கூகுள் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் குறிப்பாக நோட் புக்குகள் என்று அழைக்கப்படும் மடிக்கணினிகளுக்கு சிறப்பாக பயன்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள் ஏற்கனவே ‘ஆன்ட்ராய்ட்’ என்ற ஆபரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது. ஆனால் இது செல்பேசி மூலம் செய்யப்படும் இணையதள நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தை மடிக்கணினி உற்பத்தியாளர்களும் தங்கள் தயாரிப்புகளில் நிர்மாணம் செய்தனர். ஆனால் கூகுள் நிறுவனம் இதனை ஊக்குவிக்கவில்லை.
இதனால் தற்போது குரோம் உலாவியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஆபரேட்டிங் சிஸ்டம் மடிக் கணினிகளுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது கணினி ஆபரேட்டிங் சிஸ்டத்தில் மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.