அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான ஸ்டீம் டர்பைன் மற்றும் ஜெனரேட்டர்களை உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலையை தமிழகத்தில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசும் தோஷிபா ஜேஎஸ்டபிள்யூ டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன.
ஜப்பானின் தோஷிபா எலெக்ட்ரானிக் நிறுவனமும் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனமும் கூட்டாக அமைக்கும் தொழிற்சாலை இது.
இந்த ஒப்பந்தப்படி சென்னையிலிருந்து 18 கிமீ வடக்கே 400000 சதுர மீட்டர் பரப்பளவில் தங்கள் தொழிற்சாலைக்கான இடத்தை குத்தகை அடிப்படையில் அரசிடமிருந்து பெறுகிறது தோஷிபா ஜேஎஸ்டபிள்யூ.
160 மில்லியன் டாவலர் முதலீட்டில் துவங்கும் இந்த நிறுவனத்தின் பூர்வாங்கப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தி முழு அளவில் துவங்கும்.
இந்தத் தொழிற்சாலை அமைந்து உற்பத்தி துவங்கினால், 500 மற்றும் 1000 மெகாவாட்ஸ் திறன் கொண்ட அனல் மின்சார நிலையங்களின் உள்கட்டமைப்புத் தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படும்.
ஜப்பானில் உள்ள தோஷிபாவின் பவர் ப்ளாண்ட் இந்த புதிய தொழிற்சாலைக்கு முழு அளவில் உதவிகளைச் செய்யும் என அறிவித்துள்ளார் தோஷிபா ஜேஎஸ்டபிள்யூ டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர் இடாரு இஷிபாஷி.