எயிட்ஸ் நோயை தோற்றுவிக்கும் எச் ஐ வி வைரஸ் தொற்று, ஆண்களை விட பெண்களின் உடம்பில் வேகமாக பரவுவதற்கான காரணியை அமெரிக்க விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்திருக்கிறார்கள்.

எச் ஐ வி வைரஸ்
எச் ஐ வி வைரஸ்

மனித உடலில் எச் ஐ வி தொற்று ஏற்பட்ட பிறகு, அது எயிட்ஸ் நோயாக முற்றுவதற்கு எடுத்துக்கொள்ளும் காலகட்டம் பெண்களை விட ஆண்களுக்கு அதிக நாட்கள் ஆவது ஏற்கனவே மருத்துவ உலகில் தெரிந்த விடயமாக இருந்தாலும் அதற்கான காரணம் என்ன என்று உறுதியாக தெரியாமல் இருந்து வந்தது.

தற்போதைய ஆய்வின் முடிவுகள், பெண்களின் உடம்பில் காணப்படும் நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள் சில, ஆண்களின் உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு மூலக்கூறுகளுடன் ஒப்பிடும்போது மாறுபட்டு காணப்படுவதாகவும், இந்த மாறுபட்ட நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள் காரணமாக, பெண்களின் உடம்பிற்குள் செல்லும் எச் ஐ வி வைரஸ் வேகமாக எயிட்ஸ் நோயாக பரிணமிப்பதாக இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

அதுமட்டுமல்லாமல், பெண்களின் உடம்பில் இருக்கும் குறிப்பிட்ட சில ஹார்மோன்கள், குறிப்பாக அவர்களின் மாதவிடாய் தொடர்புடைய ஹார்மோன்களும் இதில் முக்கிய பங்காற்றுவதாக இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

இந்த கண்டுபிடிப்புகள் எயிட்ஸ் நோய் சிகிச்சைமுறையில் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது