புதுச்சேரி முதலியார் பேட்டையில் இரு ரவுடிகளை அவர்களது எதிர்கோஷ்டி வெடிகுண்டுகளை வீசியும் அரிவாள்களால் வெட்டியும் கொலை செய்தது.

புதுச்சேரி முதலியார் பேட்டை அனிதா நகரைச் சேர்ந்த ரவுடிகள் சாந்த மூர்த்தி, கருணா. இருவரும் குடோன்களுக்கு லாரிகளில் இருந்து சரக்குகளை ஏற்றி, இறக்கும் தொழிலாளர்களை சப்ளை செய்து வந்தனர்.

இதனால் இருவருக்கும் தொழில் போட்டி இருந்து வந்தது.

சில மாதங்களுக்க முன் கருணாவின் உறவினர்களான காந்தி, பரசுராமன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதில் சாந்தமூர்த்தி தரப்புக்கு தொடர்புள்ளதாகக் கருதப்படுகிறது.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கருணா ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளான். ஆனாலும் சிறையில் இருந்தவாரே தனது ரவுடி ராஜாங்கத்தை தனது ஆட்கள் மூலம் நடத்தி வருகிறான்.

அதே போல் சாந்த மூர்த்தியும் வழக்கு ஒன்றில் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் வெளியில் வந்தான்.

சாந்த மூர்த்தி காரைகாலில் தங்கியிருந்து கையெழுத்து போடுமாறு நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. ஆனால், அவன் அங்கு கையெழுத்து போடாமல் புதுவையில் இருந்து வந்தான். இதையடுத்து அவனது ஜாமீனை ரத்து செய்து பிடிவராண்டு பிறப்பிக்குமாறு புதுவை காவல்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில் கருணா கோஷ்டியும், சாந்தமூர்த்தி கோஷ்டியும் அரியாங்குப்பம் மணவெறி அருகே உள்ள தென்னந்தோப்பில் சமாதான பேச்சு நடத்தினர். பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டதில் சாந்த மூர்த்தியையும், அவனது கூட்டாளி ராஜீவ் காந்தி ஆகியோர் கருணா கோஷ்டி வெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்தது.

இது குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.