பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறியுள்ளவர்களை பரிசோதிப்பதற்கு தனியார் பரிசோதனைக் கூடங்களையும் அனுமதிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக இந்தியாவின் சுகாதாரத்துறைச் செயலர் நரேஷ் தயாள் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில், 14 வயது பள்ளி மாணவி ஒருவர், கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு, பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்ததை அடுத்து, புனே நகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் பெருமளவில் மருத்துவமனைகளுக்கு வந்தனர்.
அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பரிசோதனை வசதி இருப்பதால் அங்கு ஆயிரக்கணக்கானோர் கூடிவிட்டார்கள். அதை சமாளிக்க முடியவில்லை. அதேபோல், டெல்லி உள்பட வேறு சில நகரங்களிலும் பொதுமக்கள் பெருமளவில் அரசு மருத்துவமனைகளுக்கு பரிசோதனை கோரி வந்தார்கள்.
தனியார் மருத்துவமனைகளுக்கு சோதனை நடத்த அரசு அனுமதிக்காததால்தான் இத்தகைய நிலை ஏற்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறைச் செயலர் நரேஷ் தயாள். அரசின் புதிய முடிவை அறிவித்தார்.
இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களில், 10 முதல் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள்தான் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பன்றிக் காய்ச்சலைத் தடுக்க, அடுத்த நான்கு முதல்
ஏழு மாதங்களுக்குள் தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்டுவிடும் என்றும் சுகாதாரத்துறைச் செயலர் நரேஷ் தயாள் நம்பிக்கை தெரிவித்தார்.