மதுரையில், பன்றிக் காய்ச்சல் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் கால் சென்டரை மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி தொடங்கி வைத்தார்.

நாட்டிலேயே பன்றிக் காய்ச்சல் தொடர்பான முதலாவது கால் சென்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது. அப்பல்லோ மருத்துவமனை இந்த கால் சென்டரை தொடங்கியுள்ளது.

பன்றிக் காய்ச்சல் தொடர்பான பொதுமக்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் இந்த கால் சென்டர் விளக்கம் அளிக்கும்.

இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரீத்தா ரெட்டி, செய்தியாளர்களிடம் கூறுகையில், பன்றிக் காய்ச்சல் தொடர்பாக இந்த கால் சென்டர் அமைக்கப்பட்டிருந்தாலும் கூட வருங்காலத்தில் ஒரு முழுமையான சுகாதார கால் சென்டராக இது உருவெடுக்கும்.

அனைத்து நோய்களுக்கும் இங்கு விளக்கம் தரும் வகையில் இது உயர்த்தப்படும். அரசுடன் இணைந்து நாங்கள் செயல்பட விரும்புகிறோம்.

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் பெங்களூர் , கொல்கத்தா, டெல்லி , மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை களில் சிகிச்சை அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தற்போது இந்த பிரச்சினையை அரசு மட்டுமே கையாண்டு வருகிறது. இதற்குத் தேவையான மருந்துகள் அரசிடம் மட்டுமே உள்ளன. ஏற்கனவே சென்னை , ஹைதராபாத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகளை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். மேலும், அரசுக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்யவும் காத்திருக்கிறோம் என்றார் ரெட்டி