மும்பைப் பெண் இஷ்ரத் ஜெஹான் உள்ளிட்ட நான்கு பேர் குஜராத் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை விசாரித்த குஜராத் மாஜிஸ்திரேட் தமங் அளித்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க குஜராத் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
2004ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி அகமதாபாத் புறநகரில் நடந்த கொடூர சம்பவத்தில் இஷ்ரத் ஜெஹான் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இவர்கள் நான்கு பேரும் தீவிரவாதிகள் என்றும்,மோடியைக் கொல்ல வந்தவர்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
ஆனால் இந்த விவகாரத்தை விசாரித்த மாஜிஸ்திரேட் தமங் என்பவர், இது அப்பட்டமான படுகொலைச் சம்பவம். என்கவுண்டரே அல்ல. கொல்லப்பட்டவர்களும் தீவிரவாதிகள் அல்ல என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கை பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆனால் இதை குஜராத் அரசு நிராகரித்து விட்டது. இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேரும் தீவிரவாதிகள்தான், இது போலி என்கவுண்டர் அல்ல என்றும் மோடி அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமங் அறிக்கை மீது மேல் நடவடிக்கை எடுக்க குஜராத் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மேலும் மாஜிஸ்திரேட் தமங் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தவும் உயர்நீதிமன்ற நீதிபதி ஜாவேரி உத்தரவிட்டுள்ளதால் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக தமங் வெளியிட்ட அறிக்கைக்குத் தடை விதிக்கக் கோரி குஜராத் அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்தபோதுதான் நீதிபதி ஜாவேரி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதுதொடர்பாக நீதிபதி ஜாவேரி பிறப்பித்த உத்தரவில், என்கவுண்டர் விவகாரம் தொடர்பாக மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம். அப்படி இருக்கையில் மாஜிஸ்திரேட் தமங் உயர்நீதிமன்றத்தைக் கலந்து ஆலோசிக்காமல் விசாரணை அறிக்கையை வெளியிட்டது எப்படி என்று தெரியவில்லை. அவர் நிச்சயம் உயர்நீதிமன்றத்தைக் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்றார்.
இருப்பினும் நீதி விசாரணையில் இடம் பெற்றுள்ள சில தகவல்களை இஷ்ரத்தின் தாயார் ஷமீமா கெளசர், பிரமோத் குமார், மோகன் ஜா, ஜே.கே.பட் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழுவின் முன்பு சமர்ப்பிக்கத் தடை இல்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இஷ்ரத் மரணமடைந்தது எப்படி என்பதை விசாரிக்க குஜராத் உயர்நீதிமன்றம் அமைத்த கமிட்டிதான் இந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு. இவர்கள் நவம்பர் 3ம் தேதிக்குள் தங்களது அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள்.