குஜராத்தில் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக கூறப்படும் இஷ்ரத் ஜெஹானின் தாயார் தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறி மத்திய அரசு, குஜராத் அரசு மற்றும் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஷ்ரத் ஜெஹான் உள்ளிட்டோர் கொல்லப்பட்டது திட்டமிட்ட படுகொலை. அது போலி என்கவுண்டர், வேண்டும் என்றே அவர்களைக் கொலை செய்துள்ளனர் என்று குஜராத் மாநில நீதி விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த குஜராத் அரசு, இந்த நீதி விசாரணை அறிக்கைக்கு தடை விதிக்குமாறு கோரியது. அதை ஏற்று குஜராத் உயர்நீதிமன்றம் , இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்தத் தடையை நீக்கக் கோரி இஷ்ரத்தின் தாயார் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

இதை விசாரித்த நீதிபதிகள் பி.என். அகர்வால், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு குஜராத் அரசுக்கும், மத்திய அரசு க்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

நான்கு வாரங்களுக்குள் பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி இஷ்ரத்தின் தாயார் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில் குஜராத் அரசின் கோரிக்கையை ஏற்று இடைக்காலத் தடை விதித்தது சரியான நடவடிக்கையாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அதேபோல இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சிபிஐக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கடந்த 2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி அகமதாபாத் நகருக்கு வெளியே வைத்து இஷ்ரத் ஜஹான், ஜாவேத் குலாம் ஷேக் என்கிற பிரனேஷ் குமார் பிள்ளை, அம்ஜத் அலி என்கிற ராஜ்குமார், அக்பர் அலி ரானா, ஜிசான் ஜோஹர் அப்துல் கனி ஆகியோர் போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.