இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரையை 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.

3230320-Hajj-Pilgrimage-Google-Image-1இந்த ஆண்டு மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 491 இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் மெக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்தியர்களின் ஹஜ் யாத்திரை நாளை முதல் தொடங்குகிறது. முதல் பேட்ச் இந்திய யாத்ரீகர்கள் நாளை பயணமாகவுள்ளனர் என்று ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வரும் சீசன் என்பதால், சவூதி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்திய யாத்ரீகர்களின் உடல் நிலையை கண்காணிக்க 10 இந்திய டாக்டர்கள் அடங்கிய குழு ஒன்று அக்டோபர் 10ம் தேதியே வந்து விட்டது.

மேலும், மெக்காவில் இந்திய ஹஜ் குழுவின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள 30 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையில் 2 தனி அறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பன்றிக் காய்ச்சல் அறிகுறி கொண்ட இந்தியப் பயணிகள் இதில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

இந்திய ஹஜ் கமிட்டியின் மூலமாக 1,15,000 யாத்ரீகர்களின் பயணத் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 45,491 பயணிகள், தனியார் டூரிஸ்ட் ஆபரேட்டர்கள் மூலமாக ஹஜ் யாத்திரையை மேற்கொள்கின்றனர்.

இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்காக சவூதியா நிறுவனம் 115 விமான சேவையும், ஏர் இந்தியா 130, என்ஏஎஸ் ஏர் நிறுவனம் 96 விமான சேவையையும் இயக்கவுள்ளது.