விபத்தில் பலியான குடும்பத்திற்கு, நஷ்ட ஈடு வழங்க காலம் தாழ்த்திய தர்மபுரியில் உள்ள யுனைடெட் இன்சூரன்ஸ் அலுவலகப் பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டது .

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கலைவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் (40). இவர் கடந்த 1998 ஜூன் 16 ம் தேதி, பேச்சாம்பள்ளி – கல்லாவி சாலையில் பைக்கில் சென்ற போது, அய்யனார் அப்பன் என்ற தனியார் பஸ் மோதியதில் பரிதாபமாக இறந்தார்.

இதனால், நஷ்ட ஈடு கேட்டு ஸ்ரீரங்கன் மனைவி சுசீலா, மகன் செந்தில், மகள் சோனியா ஆகியோர், தர்மபுரி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஸ்ரீரங்கன் குடும்பத்துக்கு, தர்மபுரி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நான்கு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, கடந்த 2005 ம் வருடம் ஜனவரி மாதம் 6 ம் தேதி நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம், நஷ்ட இழப்பீட்டு தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

இதனால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கோரி, மீண்டும் தர்மபுரி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, 2009 ஆகஸ்ட் 17 ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி பத்மநாபன், விபத்தில் பலியான ஸ்ரீரங்கன் குடும்பத்தினருக்கு வட்டியுடன் சேர்த்து, ஏழு லட்சத்து 4,269 ரூபாய், செப்டம்பர் 30 ம் தேதிக்குள் வழங்க வேண்டும். பணம் கட்டத் தவறினால் இன்சூரன்ஸ் அலுவலகப் பொருட்கள் ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இதனையடுத்து, நீதிமன்ற அமீனாக்கள், யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவன பொருட்களை ஜப்தி செய்ய சென்றனர். இரு நாட்களுக்குள் இழப்பீடு தொகை வழங்குவதாக, இன்சூரன்ஸ் அதிகாரிகள் கெஞ்சி கேட்டுக் கொண்டதை அடுத்து, நீதி மன்ற அமீனா ஜப்தி நடவடிக்கையை தள்ளி வைத்தனர்.