சமச்சீர் கல்வி திட்டப்படி புதிய பாட நூல்கள் தயாராகி உள்ளன. இவற்றை ஆய்வு செய்து, பொருளடக்கத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை முதல்வர் கருணாநிதி வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி சமச்சீர் கல்வி பாடநூல்கள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடந்தது.

முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநில திட்டக் குழு துணைத் தலைவர் மு.நாகநாதன், எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் தமிழக தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் கோ.சத்ய கோபால் உட்பட பள்ளிக் கல்வித்துறை உயர் அலுவலர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரான முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான பாட நூல்கள் முதல்வர் கருணாநிதியின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

பாட புத்தகத்தில் உள்ள பொருளடக்கம் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி ஆய்வு செய்து, விவாதித்து தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.