வங்கி இல்லாத ஊர்களிலும் வங்கிச் சேவையை வழங்கும் நோக்குடன் இந்தியன் வங்கி சார்பில் ஸ்மார்ட் கார்டு என்ற மின்னணு அட்டை புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

நாட்டிலேயே முதன் முதலாக புதுச்சேரியில் உள்ள செட்டிப்பட்டு கிராமத்தில் முகவர்கள் மூலம் வங்கிச் சேவை வழங்கும் இத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப உதவி அளித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் வி.எஸ்.தாஸ் இந்த ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார். விழாவில் அவர் பேசுகையில், “வங்கி வசதியற்ற, வங்கி குறைவான பகுதிகளில் வங்கித் தொடர்பாளர் என்கிற முகவர்களுக்கு இந்தியன் வங்கி அனுமதி அளிக்கும். இவர்கள் வங்கியின் சிறிய அளவிலான பணப் பரிவர்த்தனைக்கான அதிகாரம் பெற்ற பிரதிநிதிகளாக செயல்படுவர்.

அந்தப் பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்கள், மளிகைக் கடைகள், ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்கள், பொது தொலைபேசி நிலையங்கள், பெட்ரோல் பங்குகள் போன்றவை வங்கித் தொடர்பாளர்களாக பணியாற்றலாம்.

வங்கித் தொடர்பாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வங்கிச் சேவை வழங்க வேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டை பயன்படுத்துவதற்கான கருவியை வங்கித் தொடர்பாளர் வைத்திருப்பார்.

இக் கருவி மூலம் முகவரிடமே பணம் செலுத்தலாம், பெறலாம். பணம் பெறும்போதும், செலுத்தும் போதும் உடனடியாக ரசீது (தமிழ் மற்றும் ஆங்கிலம்) வழங்கப்படும்.

அப்போது எவ்வளவு பணம் எடுக்கப்பட்டது மற்றும் செலுத்தப்பட்டது என்று கருவியில் குரல் ஒலிக்கும். இதனால் வாடிக்கையாளரை வங்கித் தொடர்பாளர்கள் ஏமாற்ற வாய்ப்பில்லை. எல்லா பணப் பரிமாற்றமும் இணையம் சார்ந்து இருப்பதால், அவை உடனடியாக வாடிக்கையாளர் கணக்குகளில் பதிவு செய்யப்படுகிறது. வங்கி கிளைகளிலும் இந்த கார்டைப் பயன்படுத்தலாம்.

பாமர மக்கள், சிறிய அளவிலான தொகையை பாதுகாப்பாக செலுத்தி, எடுக்க விரல்பதிவு முறையில் இந்த சேவை இயக்கும். வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு அருகிலேயே இந்த சேவை கிடைக்கும். அவர்கள் நேரத்தையும், பணத்தையும் செலவிட்டு வங்கிக் கிளைகளுக்கு செல்லவேண்டியதில்லை” என்றார்.