ஒரு இந்துக் கோவிலை, ஒரு சர்ச்சை, ஒரு யூத ஆலயத்தைக் கட்டலாம் என்றால் ஏன் ஒரு மசூதி கட்டுவதற்கு நாம் எதிர்ப்பு  தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து வந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்கள் விமானம் கொண்டு தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டதன் 9வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இரட்டைக்கோபுரம் இருந்த இடத்திற்கு அருகே ஒரு இஸ்லாமிய வழிபாட்டு மையம் கட்டப்படவுள்ளது. ஆனால் இதற்கு அமெரிக்கர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதிபர் ஒபாமா, நிச்சயம் அங்கு மசூதி கட்டப்படும் என்று கூறி வருகிறார்.

இந்த நிலையில் இரட்டைக் கோபுர தாக்குதல் [^] சம்பவ நினைவு தினத்தையொட்டி அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஒபாமா கூறியதாவது…

நியூயார்க் மசூதி விவகாரம் குறித்து நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அவரது மதத்தை சுதந்திரமாக பின்பற்ற அனைத்து உரிமைகளும் உள்ளது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது அமெரிக்கா [^].

இந்த பூமியில் உருவாக்கப்பட்ட அனைத்து ஆண்களும், பெண்களும் சமமானவர்களே. அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன. அனைவரும் அவரவர் மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்கலாம்.

ஒரு இடத்தில் உங்களால் சர்ச் கட்ட முடியும்போது, ஒரு யூத ஆலயம் கட்ட முடிகிறபோது, ஒரு இந்துக் கோவிலை கட்ட முடியும் என்கிறபோது, ஏன் ஒரு மசூதியையும் கட்ட முடியாது.

செப்டம்பர் 11 சம்பவத்தில் பலியான அனைவருக்காகவும் நான் அனுதாபப்டுகிறேன். அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களை நான் முன்பு சந்தித்துள்ளேன். அவர்களது இழப்பும், துயரமும் நீண்டது, அவ்வளவு சீக்கிரம் அடங்க முடியாதது என்பதை நான் உணர்கிறேன், அவர்களது சோகத்தில் நானும் பங்கேற்கிறேன். அனைத்து அமெரிக்கர்களும் இந்தசோகத்தில் பங்கேற்கின்றனர் என்றார் ஒபாமா.