மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வில்லூர் கிராமத்தில் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்ட 54 பேர் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தில் மதுரை மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கர்க், பேரையூர் டி.எஸ்.பி. அன்வர் ஷா ஆகியோரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கலவரக் கும்பல் கற்களை வீசித் தாக்கியதில் 15க்கும் மேற்பட்ட போலீஸாரும் காயமடைந்தனர்.

போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் செந்தில் மற்றும் பழனி ஆகியோர் காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கலவரம் குறித்து ஐ.ஜி. மஞ்சுநாதா நிருபர்களிடம் கூறுகையில், வில்லூர் கிழக்குத் தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்ற தங்கபாண்டியன் என்பவரை சிலர் தடுத்து நிறுத்தி பைக்கை பறித்துள்ளனர். இதுதொடர்பாக, 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அவர்களுடன் எஸ்.பி. அஸ்ரா கர்க் பேச்சு நடத்தினார். பேச்சுவார்த்தையில் அமைதி ஏற்படுத்தப்பட்ட நிலையில் இன்னொரு பிரிவினரது வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன.

மேலும், வில்லூர் காவல் நிலையத்துக்கு ஆயுதங்களுடன் திரண்டு வந்த சிலர் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். எஸ்.பி. மற்றும் பேரையூர் டி.எஸ்.பி. ஆகியோரது கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதையடுத்து கலவரக் கும்பலைக் கலைக்க தடியடி,கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கலவரக்காரர்கள் 45 பேர் கைது செய்யப்பட்டு 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 150 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உசிலம்பட்டி கோட்டாட்சியர் புகழேந்தி, திருமங்கலம் தாசில்தார் பரமேஸ்வரி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வில்லூரில் முகாமிட்டுள்ளனர். 5 மாவட்டங்களில் இருந்து ஆயுதப் படை போலீஸார் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரட்டை டம்ளர் முறை, வாகனங்களில் குறிப்பிட்ட தெருவுக்குள் செல்லக் கூடாது என யாராவது தீண்டாமைக் கொடுமையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஐ.ஜி.