புதுச்சேரி முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள ரங்கசாமி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளதாக மட்டும் கூறியுள்ளார். அதே நேரத்தில் ஜெயலலிதாவின் கண்டனத்துக்கு அவர் பதிலளிக்க மறுத்துள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இவரது என்.ஆர்.காங்கிரஸ் புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால், அதிமுக வலியுறுத்தியும் அந்தக் கட்சியை ஆட்சியில் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார் ரங்கசாமி.
இவரது கட்சிக்கு 15 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், காரைக்காலில் அதிமுகவை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற திமுகவைச் சேர்ந்த சிவக்குமார் உடன் சேர்த்துக் கொண்டு 16 எம்எல்ஏக்களுடன் பெரும்பான்மையைப் பெற்றுவிட்டார் ரங்கசாமி.
ரங்கசாமி மட்டும் தற்போது முதல்வராகப் பதவியேற்றுள்ளார். மற்ற அமைச்சர்கள் விரைவில் பதவி ஏற்க வேண்டும். இதில் அதிமுகவுக்கு இடம் தருவது குறித்து ஜெயலலிதாவுடன் ரங்கசாமி இதுவரை பேசவில்லை.
இதையடுத்து அதிமுகவுக்கு ரங்கசாமி துரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார்.
இந் நிலையில் ஜெயலலிதாவின் கண்டனம் குறித்து கருத்துத் தெரிவிக்க ரங்கசாமி மறுத்துவிட்டார்.
இது குறித்துரங்கசாமியை அவரது அறையில் நிருபர்கள் சந்தித்துக் கேட்டபோது, அதற்கு பதில் அளிக்க மறுத்த ரங்கசாமி இதற்கு மேல் ஏதும் கேட்க வேண்டாம் என்பது போல கையால் சைகை காட்டினார்.
அதிமுகவை கூட்டணியில் சேர்த்துக் கொண்டோமே தவிர, ஆட்சியில் பங்கு தருவோம் என்று எப்போது கூறினோம் என்று கேட்கின்றனர் ரங்கசாமியின் கட்சியினர் என்பது குறிப்பிடத்தக்கது.