வெறுப்பைத் தூண்டும் விதமான, நோகடிக்கும் விதமான, இழிவு படுத்தும் விதமான விஷயங்கள் தங்கள் இணைய தளத்தில் பிரசுரமானால் அவற்றை அந்த இணையதளங்கள் அகற்றிவிட வேண்டும் என்று இந்திய அரசின் புதிய விதிமுறைகள் கூறுகின்றன.

ஒருவரின் அடையாள விபரங்களை பதிந்துகொண்ட பிறகே அவர் இணையத்தைப் பயன்படுத்த நெட் கஃபேக்களின் உரிமையாளர்கள் அனுமதிக்க வேண்டும், பாவனையாளர் செல்லுகின்ற இணையதளங்களின் பட்டியலையும் அவர்கள் பதிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் இவ்விதிகள் கூறுகின்றன.

ஒரு இணையதளத்தில் மோசமான, வெறுப்பை தூண்டும் விதமான, இழிவுபடுத்தும் விதமான விஷயம் ஏதும் பிரசுரமானால் அது பற்றி புகார் வந்து முப்பத்து ஆறு மணி நேரத்துக்குள் அந்த இணைய தளம் அந்த ஆட்சேபணைக்குரிய விஷயத்தை அகற்றிவிட வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தின் புதிய விதிமுறை கூறுகின்றன.

இப்படியான ஒரு விதிமுறை இணையப் பாவனையாளர்களின் கருத்துரிமையை ஒடுக்குவதாக உள்ளது என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. முன்னணி குறுந்தகவல் வலைப்பதிவு சேவையான டுவிட்டரில் மிகவும் பிரபலமாக இருப்பவர் நிகில் குமார் வர்மா, புதிய சட்டங்கள் அச்சங்களை தோற்றுவித்துள்ளதாகக் கூறுகிறார்.

இந்த புதிய விதிமுறைகள் தொடர்பில் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பாவனையாளர்கள் பிரசுரிக்கும் விஷயங்களுக்கு இணைய சேவை வழங்குவோர் பொறுப்பேற்க வேண்டும் என்று இருப்பது சரியல்ல. ஆட்கள் சுயதணிக்கை செய்துகொள்ளவும், தகவலும் கருத்தும் தடையின்றி பரிமாறப்படுவதற்கு இடைஞ்சல் ஏற்படவும் இது வழிவகுக்கும் என்று கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய இணையப்பாவனையாளர்கள் நாற்பது சதவீதமானோர், நெட் கபே என்று சொல்லப்படுகின்ற இணையப் பாவனை வாடகை நிலையங்கள் வழியாகவே இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இனி நெட் கஃபே உரிமையாளர்கள் தம்மிடம் வரும் வாடிக்கையாளர்களிடம், பெயர் முகவரி, புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை போன்ற விபரங்களை வாங்கி சரிபார்த்து பதிந்துகொண்டு பின்னர்தான் அவரை இணையத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.