தானே புயலால் கடலூர் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. பல பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. கடலூர் மாவட்டத்தில் வணிகம் நிறைந்த பகுதியான பண்ரூட்டியில் புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக மின்சாரம் கிடைக்கவில்லை.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தானே புயல் காரணமாக பண்ரூட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சரிந்துள்ளன. டிரான்ஸ்பார்மர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

பண்ரூட்டிக்கு மின்சாரம் வழங்கும் துணை மின் நிலையங்களான பூங்கோணம், உறையூர், மேலப்பாளையம் ஆகியவற்றிற்கு மின்சாரம் இது வரை கிடைக்கப்பெறவில்லை. நெய்வேலியிலிருந்து வரும் மின்கோபுரங்களில் ஏற்பட்ட கோளாரை சரி செய்ய முடியாததால் மின்சாரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

பண்ரூட்டியில் உதவி செயற்பொறியாளர் பணியிடம் காலியாக உள்ளது. உதவி கோட்ட பொறியாளர்கள், பெண்களாக இருப்பதால் சம்பவ இடங்களுக்கு உடனடியாக வர முடியவில்லை. இதனால் மூன்று துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் கிடைக்கப்பெறவில்லை.

விழுப்புரம், கடலூரின் கடலோர பகுதிகளில் மின்சாரம் கிடைத்த போதிலும், இங்கு மின்சாரம் இல்லை. வெளி மாவட்டங்களிலிருந்து மின்சாரம் கொண்டு வருதல் மூலமும், அரசு துரித நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அடுத்த மூன்று நாட்களில் மின்சாரம் கிடைக்கும் என கூறினார்.

பண்ரூட்டியில் மின்சாரம் இல்லாததால் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஜெனரேட்டர் வசதியுள்ள கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பண்ரூட்டியில் பெரும்பாலான மக்கள் குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். சென்னையிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டாலும், சாலை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் நகர் பகுதிகளில் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது.

பண்ரூட்டியை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர். மீட்பு பணிகளை விரைவு படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.