புதுவை அரசியலில் தனி ஆளுமை செலுத்தி 74-வயதில் உடல் நலக்குறைவால் காலமான ஃபரூக் மரைக்காயரின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

இந்திய அரசியல் வரலாற்றில் ஃப்ரூக் என்றதும் இரண்டு தலைவர்கள் சட்டென நினைவுக்கு வருவர். ஒருவர் புதுவையின் ஃபரூக் மரைக்காயர். மற்றொருவர் காஷ்மீரத்து ஃப்ரூக் அப்துல்லா.

இப்போது ஃபரூக் மரைக்காயர் காலமாகிவிட்டார். தமது இறுதிக் காலத்தில் கேரள மாநில ஆளுநராக பதவி வகித்தார். உடல்நலக்குறைவுக்காக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

புதுவையின் காரைக்காலில் 1937 ஆம் ஆண்டு செப்டமர் 6-ந் தேதி பிறந்த மரைக்காயர் தமது மாணவர் பருவத்தில் பிரெஞ்சு பேராதிக்கத்திலிருந்து புதுச்சேரியை விடுவிக்கும் விடுதலைப் போரில் தீவிரப் பங்கேற்றார்.

ஃப்ரூக் மரைக்காயர் 1964 ஆம் ஆண்டு புதுவை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இளம்வயதிலேயே சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர் ஃப்ரூக் மரைக்காயர்!

மாணவப் பருவத்திலேயே அரசியலுக்கு வந்தவர் பரூக். புதுச்சேரியின் விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட்டார். 1964ம் ஆண்டு முதல் முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991 வரை அவர் தொடர்ந்து எம்.எல்.ஏவாக இருந்து சாதனை படைத்தவர்.

1964 முதல் 67 வரையில் சபாநாயகராகவும், 80 முதல் 85 வரையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.

3 முறை முதல்வராக இருந்த அவர்,இரண்டு முறை காங்கிரஸ் அரசின் முதல்வராகவும், ஒரு முறை திமுக அமைச்சரவையின் முதல்வராகவும் இருந்தவர்.

1991, 96, 99 ஆகிய ஆண்டுகளில் மக்களவைத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அமைச்சராக இருந்தார். புதுச்சேரியில் விமான நிலையம் அமையவும், புதுவையில் பல்கலைக்கழகம் அமையவும் காரணகர்த்தாவாக திகழ்ந்தார்.

2004ம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். 2010ம் ஆண்டு ஜார்க்கண்ட் ஆளுநராக பொறுப்பேற்றார்.

2011, ஆகஸ்ட்25ம் தேதி கேரள ஆளுநராகப் பதவியேற்றார். அவருக்கு ஷாஜகான் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். ஷாஜகான் முன்னாள் புதுவை அமைச்சர் ஆவார்.

புதுவை, கேரளத்தில் விடுமுறை – தலைவர்கள் அஞ்சலி

பரூக் மரைக்காயர் மறைவை அனுசரிக்கும் வகையில் புதுச்சேரி மற்றும் கேரளத்தில் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃப்ரூக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்த கேரள முதல்வர் உம்மண் சாண்டி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் புதுவைக்கு வருகை தந்துள்ளார்.