இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 10% தனி இடஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 3.5% இட ஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தனி இட ஒதுக்கீடு கோரி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்புநெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகில் 14.02.12 செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டத் தலைவர் எஸ். யூசுப் அலீ தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் செய்யது அலீ முன்னிலை வகித்தார். மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் கூறியதாவது:

“நாட்டின் விடுதலைக்காக கல்வியையும், வேலை வாய்ப்புக்களையும் தியாகம் செய்தவர்கள் முஸ்லிம் சமுதாயத்தினர். அத்ததைய முஸ்லிம் சமுதாயம் தற்போது கல்வி வேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கி, கூலித் தொழிலாளியாகவோ, இறைச்சிக் கடைக்காரராகவோ, நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ, கொல்லுப்பட்டறையில் கடின வேலை செய்வோராகவோ, தோல் பதனிடும் தொழிலாளியாகவோ, பெட்டிக்கடைகள் நடத்துபவராகவோ, குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவராகவோ இருக்கிறார்கள்.

சொந்த நாட்டில் தகுந்த கல்வியும் தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல் படுகின்றனர். ஒட்டகம் மேய்த்தல், சாலை போடுதல், கழிவுகளைச் சுத்தம் செய்தல், உயிரைப் பணயம் வைத்து உயரமான கட்டிடப் பணிகளில் கூலித் தொழில் செய்தல், காரோட்டும் வேலை, வீடுகளைச் சுத்தம் செய்தல், சமையல் வேலை இப்படி அற்பமான ஊதியத்தில் வேலை பார்க்கின்றனர்.

இந்த அவல நிலைகளை நீதிபதி ராஜேந்திர சச்சார் மற்றும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆகியோர் தங்களது விரிவான அறிக்கைகள் மூலம் மத்திய அரசிடம் விளக்கியிருக்கின்றனர்.

* 88 லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் 11 லட்சம் இருக்க வேண்டிய முஸ்லிம்கள் 35 ஆயிரம் மட்டும் தான் உள்ளனர் என்று முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டியின் அறிக்கை கூறுகிது.

* பாதுகாப்பு தொடர்பான பணிகளில் மூன்று சதவிகிதம் உள்ளனர் என்றும் தலித் மக்களின் நிலையை விட மோசமாக முஸ்லிம்களின் நிலைமை இருக்கிறது என்றும் சச்சார் அறிக்கை கூறுகிறது.

* முஸ்லிம்களின் கல்வி அரசியல் பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கையில் கூறப்பட்ட அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்:

* முஸ்லிம்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 65.31 சதவிகிதம். அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 35 பேர் ஐந்தாம் வகுப்பு கூட படிக்கவில்லை.

* ஐந்தாம் வகுப்புக்கு மேல் எட்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் 15.14 சதவிகிதம் என அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 85 பேர் எட்டாம் வகுப்பு வரை படிக்கவில்லை.

* ஷி பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 10.96% என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் 11 பேர் தான் பத்தாம் வகுப்பு படித்தவர்கள்.பத்தாம் வகுப்புக்கு மேல் பன்னிரண்டு வரை படித்தவர்கள் 4.53% என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் ஐந்து பேர் தான் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் .பட்டப்படிப்பு படித்தவர்கள் 3.6 என்கிறது அந்த அறிக்கை. அதாவது 100 முஸ்லிம்களில் மூன்று பேர் தான் பட்டப்படிப்பு படித்தவர்கள்.

* முஸ்லிம் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 1832 ரூபாயும் இருபது காசுகளும் தான் என்கிறது அந்த அறிக்கை.அது மட்டுமின்றி ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 31 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர் எனவும் நீதிபதி மிஸ்ரா கமிஷன் கூறுகிறது.

முஸ்லிம்களின் அவல நிலையை மாற்றிட முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு 50 ஆண்டுகளாக முஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி வருகின்றது. ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையையும், சச்சார் கமிட்டி அறிக்கையையும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த பிறகும் முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீட்டைச் சட்டமாக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றது.

இதே போன்று தமிழகத்தில் தற்போது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவிகித இட ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமது தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுக வெற்றி பெற்றால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகமாக்கித் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆட்சியமைத்த பிறகு இதுவரை சட்டமன்றத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள அதிமுக அரசு முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது.

மத்தியில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம், இதர சிறுபான்மையினருக்கு 5 சதவிகிதம் என்று ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின்படி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை ஏழு சதவிகிதமாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம்களின் இந்த வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெறுகின்றது.”

இவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி உரையாற்றினார்.

“இந்தப் போராட்டத்திற்குப் பிறகும் மத்திய, மாநில அரசுகள் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு விஷயத்தில் அலட்சியம் காட்டினால், உலகமே திரும்பிப் பார்க்கும் அளவில் தமிழகத்தின் தலைநகரத்தில் மாபெரும் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் சந்திக்க நேரிடும்” என அவர் எச்சரித்தார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்ட துணைத் தலைவர் அஹ்மது, துணைச் செயலாளர்கள் அப்துல்காதர், அபுபக்கர், சுலைமான், தொண்டரணிச் செயலாளர் சுபைர், வர்த்தக அணிச் செயலாளர் மைதீன், மருத்துவ அணிச் செயலாளர் ஏ.சி. மைதீன், மாணவரணிச் செயலாளர் அன்சாரி மாவட்டத்தின் அனைத்துக் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கே.ஏ. செய்யது அலி
மாவட்ட செயலாளர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
போன்: 9787305434

Thanks : www.inneram.com