குஜராத் கலவரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு சமர்பித்த அறிக்கையை தனக்கு அளிக்குமாறு கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜகியா ஜாப்ரி கொடுத்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஒரு மாதத்திற்குள் அறிக்கையின் நகலை ஜகியாவிடம் கொடுக்குமாறு உத்தரவிட்டார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் தீ வைக்கப்பட்டதை தொடர்ந்து (இந்த தீ வைப்பு சம்பவத்தையும் , நரந்திர மோடி தலைமையில் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை தெஹல்கா அம்பலபடுதியதை நியாபகம் இருக்கலாம்).  இஸ்லாமியர்களின் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. பல வழிபாட்டு தலங்களும் எரிக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கானோர்  பலியாயினர்.

குல்பர்க் சொசைட்டி பகுதியில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈசன் ஜாப்ரி உள்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்பட 62 பேர் மீது புகார் கூறப்பட்டது. இந்த வழக்கை மாநில போலீசார் விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது என உச்ச நீதிமன்றத்தில் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து சிபிஐ முன்னாள் இயக்குனர் ராகவன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை கடந்த 2009ம் ஆண்டு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணை அறிக்கையை கடந்த 8ம் தேதி நீதிபதி முன்பு தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை வழங்குமாறு ஜகியா ஜாப்ரி அகமதாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தாங்கள் சமர்ப்பித்த அறிக்கையை மனுதாரர்களான ஜகியா ஜாப்ரி மற்றும் சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாத் ஆகியோருக்கு அளிப்பதற்கு சிறப்பு புலனாய்வுக் குழு எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால், அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டால் அது பொது உடைமையாகிவிடும். அதனால் அதை தங்களுக்கு அளிக்கலாம் என்று மனுதாரர்கள் வாதாடினர்.

இந்நிலையில் இது குறித்து அகமதாபாத் நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது, குஜராத் கலவரம் குறித்த சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கையின் நகலை ஒரு மாதத்திற்குள் ஜகியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உததரவிட்டுள்ளது.