கால்பந்தாட்டப் போட்டிகளின் போது பெண்கள் முக்காடு அணிந்து விளையாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மறுபரிசீலனை செய்கின்ற உலகளாவிய கால்பந்தாட்ட நிர்வாக நிறுவனமான ஃபீஃபா எதிர்வரும் ஜூலை மாதத்தில் அதன் முடிவை அறிவிக்கவுள்ளதாக சனிக்கிழமை நடைபெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.
ஹிஜாப் அணிவதை தடைசெய்யும் விளையாட்டு விதியின் மூலம் முஸ்லிம் வீராங்கனைகளுக்கு பாரபட்சம் காட்டப்படுகின்றது என்று செயற்பாட்டாளர்கள் வாதிட்டு வருகின்றனர்.
தலையை மறைக்கும் முக்காடுகளை அணிந்துகொண்டு பெண்கள் விளையாடும்போது, எதிரணியினர் அவர்களை இழுத்து தள்ளிவிடும் வாய்ப்புகள் இருப்பதால் இலகுவில் காயமடையும் ஆபத்து இருப்பதாகக் கூறி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஃபிஃபா இந்தத் தடையைக் கொண்டுவந்தது.
இப்போது, விளையாட்டுக்களின் போது பாதுகாப்பாக அணியக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதியவகை தலை அங்கிகளை அனுமதிக்கலாமா என்று ஃபிஃபா ஆராய்ந்து வருகின்றது.
இந்தப் பிரச்சனை தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்கு முன்னதாக, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஹிஜாப் அங்கிகளை பரீட்சித்துப் பார்ப்பதற்கு ஃபீஃபா தீர்மானித்துள்ளது.