கோத்ரா கலவரம் தொடர்பாக நானாவதி கமிஷன் முன்பு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆஜராகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடர்பாக குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் குஜராத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி நானாவதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டோர் சார்பாக ஜன் சங்கர்ஷ் மஞ்ச் என்ற தன்னார்வ அமைப்பு முதல்வர் நரேந்திர மோடியையும் விசாரிக்க வேண்டும் என்று நானாவதி கமிஷனிடம் முதலில் மனு கொடுத்தது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து மோடியை விசாரிகக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து விளக்கம் கேட்டு நானாவதி கமிஷன் மற்றும் குஜராத் அரசுக்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.