பாகிஸ்தானிலுள்ள அபோடாபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டு, அரபிக்கடலில் புதைத்துவிட்டதாக அமெரிக்கா கூறிவரும் பின்லேடனின் உடல் என்று சந்தேகப்படும் நபரின் உடல் அமெரிக்காவில் உள்ளதாக விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா, உலக நாடுகளில் அமைத்துள்ள தனது தூதரகங்களுடன் ரகசியமாக பரிமாறிக்கொண்ட கேபிள் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது விக்கிலீக்ஸ். இத்தகவல்களில் அமெரிக்கா உலக நாடுகளுக்கு எதிராக ரகசியமாக மேற்கொண்ட பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களும் அடங்கியிருந்தன. இதனால், விக்கிலீக்ஸ் இணையதள அசாஞ்சேமீது பாலியல் குற்றச்சாட்டு  முதலான பலவித குற்றச்சாட்டுகள் சுமத்தியும் விக்கிலீக்ஸ் இணையதளத்தைப் பல நாடுகளில் முடக்கச் செய்தும் அமெரிக்கா விக்கிலீக்ஸுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. எனினும் இதற்கு அசைந்து கொடுக்காத விக்கிலீக்ஸ், தற்போது அனானிமஸ்-விக்கிலீக்ஸ் என்ற பெயரில் மற்றொரு இணையதளத்தை உருவாக்கி, அமெரிக்காவுக்கு எதிராக மேலும் பல அதிர்ச்சியளிக்கும் ரகசிய தகவல்களை வெளியிட்டு வருகிறது.

இதில் தற்போது விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ள “பின்லேடன் உடல் என்று சந்தேகப்படும் நபரின் உடல் அமெரிக்காவில் உள்ளது” என்ற அதிர்ச்சி தகவல் உலக நாடுகளிடையே பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய இத்தகவலுக்கு ஆதாரமாக ஒரு மின்னஞ்சலை அப்படியே வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ். அமெரிக்க அரசுக்காகவும் ராணுவம் மற்றும் உளவுப்பிரிவுக்காகவும் ஸ்ட்ராட்போர் என்ற நிறுவனம் பல்வேறு நாடுகளில் உளவு வேலை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் ரகசிய மின்னஞ்சல் பரிமாற்றங்களை வெளிப்படுத்தி வரும் விக்கிலீக்ஸ்,  ஸ்ட்ராட்போர் நிறுவனத்தின் ரகசிய பிரிவின் துணைத் தலைவர் பிரட் பர்ட்டன் தனது அதிகாரிக்கு எழுதியுள்ள மின்னஞ்சல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அந்த மின்னஞ்சலில் பிரட் எழுதியுள்ளது பின்வருமாறு:

“கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடல் அமெரிக்கா கூறியபடி கடலில் புதைக்கப்படவில்லை. மாறாக அந்த உடலைச் சோதனை செய்யும் நோக்கில் தனது தனி விமானத்தில் அமெரிக்காவுக்குக் கொண்டுவந்தது சிஐஏ.

முதலில் டெல்வேர் மாகாணத்தின் டோவர் நகருக்குக் கொண்டுவரப்பட்ட உடல், பின்னர் மேரிலாண்டின் பெதெஸ்டா பகுதியில் உள்ள ராணுவத்தின் நோய் தடுப்பியல் ஆராய்ச்சி மையத்துக்குக் (Armed Forces Institute of Pathology) கொண்டு செல்லப்பட்டது.”

மேற்கண்டவாறு அந்த மின்னஞ்சலில் பிரட் தன் அதிகாரிக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கே தெரியாமல் ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின்மூலம் பின்லேடனைச் சுட்டுக்கொன்றதாக கூறிய அமெரிக்கா, இஸ்லாமிய முறைப்படி இறுதி சடங்குகள் செய்து அரபிக்கடலில் பின்லேடன் உடலைப் புதைத்துவிட்டதாக கூறியது.

அமெரிக்காவின் இக்கூற்று உலக அளவில் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சுட்டுக்கொல்லப்பட்டதாக முதலில் வெளியிடப்பட்ட பின்லேடனின் புகைப்படம், கணினி மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்ட போலி படம் என்பது நிரூபணமாகியதோடு அமெரிக்கா கூறும் தகவலில் பொய்யுள்ளது என்ற குரல் ஒலிக்கத்துவங்கியிருந்தது.

ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் துப்பறிந்து சுட்டுக் கொல்லவில்லை.  அவர் ஏற்கெனவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இறந்து விட்டார்.  இது தொடர்பாக நம்பத்தகுந்த தகவல்கள் எங்களுக்கு கிடைத்திருக்கிறது.,இவ்வாறு இரான் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு  இருந்தது நினைவு இருக்கலாம் .

இந்நிலையில், தற்போது விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தியுள்ள இத்தகவல் அமெரிக்கா, தான் சுட்டுக்கொன்றதாக கூறும் பின்லேடன் உண்மையில் பின்லேடன்தானா என்பதில் சந்தேகம் இருந்ததால் அதனை உறுதிபடுத்திக்கொள்வதற்காக அந்த உடலை அமெரிக்கா கொண்டு சென்று ரகசிய இடத்தில் வைத்துள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுவரை இது குறித்து எந்தத் தகவலும் அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா வெளியிடாததால், சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறுவது உண்மையில் பின்லேடன்தானா என்ற சந்தேகத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது.

Advertisements