சிரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மீதான ராணுவ நடவடிக்கைக்கு இந்தியாவை உள்ளடக்கிய பிரிக்ஸ் நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து `பிரிக்ஸ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு, டெல்லியில் நடைபெற்றது. இம்மாநாடு, டெல்லியில் நடைபெறுவது, இதுவே முதல்முறை ஆகும்.

மாநாட்டில், பிரதமர் மன்மோகன்சிங், சீன அதிபர் ஹு ஜின்டாவோ, ரஷிய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ், பிரேசில் அதிபர் டில்மா ரவுசப், தென்ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜ×மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலக பொருளாதார மந்தநிலை, ஈரான், சிரியா விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். சிரியா, ஈரான் மீது எத்தகைய ராணுவ நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாநாட்டை தொடர்ந்து, `பிரிக்ஸ்’ நாடுகளின் அதிகாரிகள் 2 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். தங்களுக்கிடையிலான வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு மாற்றாக, உள்நாட்டு கரன்சியையே பயன்படுத்த இந்த ஒப்பந்தங்கள் வகை செய்கின்றன.

பிரிக்ஸ் நாடுகளிடையே உள்நாட்டு கரன்சியிலேயே கடன் அளிப்பதற்கும் இந்த ஒப்பந்தங்கள் வகை செய்கின்றன.

பின்னர், பிரதமர் மன்மோகன்சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

`பிரிக்ஸ்’ அமைப்பில் உள்ள 5 நாடுகளுமே, உலக பொருளாதார மந்தநிலையாலும், தீவிரவாதத்தாலும் பாதிக்கப்பட்ட நாடுகள். உள்நாட்டு கரன்சியில் கடன் அளிப்பதன் மூலம் வர்த்தகத்தை அதிகரிக்க வழி பிறக்கும்.

உலக வங்கி பாணியில், `பிரிக்ஸ்’ நாடுகளின் மேம்பாட்டு வங்கியை தொடங்கலாம் என்று மாநாட்டில் யோசனை தெரிவிக்கப்பட்டது. இதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்து, அடுத்த மாநாட்டுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு 5 நாடுகளின் நிதி அமைச்சர்களைக் கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார் அவர்.

`பிரிக்ஸ்’ நாட்டு தலைவர்கள் வெளியிட்ட கூட்டு பிரகடனத்தில், `உலக பொருளாதாரத்தை மீண்டும் நிலைபெற செய்வதும், சந்தை நம்பிக்கையை நிலைநிறுத்துவதும் நமது உடனடி பணி’ என்று கூறப்பட்டுள்ளது.