ஐயாயிரம் கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக வியாழக்கிழமை நிறைவேறியது.

[YOUTUBE = http://youtu.be/Y57qd4nDcU4 ]

ஒடிசா மாநில கடலோர நகரான தாமராவின் அருகிலுள்ள வீலர் தீவிலிருக்கும் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து, சரியாக காலை 8.05 மணிக்கு அக்னி-5 ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது. பின்னர், அந்த ஏவுகணை இந்து மகாசமுத்திரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறி தவறாமல் துல்லியமாகத் தாக்கியது என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ) தலைவர் வி.கே.சாரஸ்வத் தெரிவித்தார். இவர் பாதுகாப்புத் துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும் கூட.

 

ஏவுகணையின் சோதனை வெற்றியடைந்த செய்தியைக் கேட்டு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி விஞ்ஞானிகளுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

 

சுமார் 50 டன் எடை கொண்ட அக்னி-5 ஏவுகணையின் நீளம் 17 மீட்டர். இது அணு ஆயுதம் தாங்கி செல்லும் திறன் கொண்டது. ஐயாயிரம் கி.மீ. தூரத்திலுள்ள இலக்கைத் தாக்கக் கூடிய திறனிருப்பதால் இது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை (இன்டர் கான்டினன்டல் பலிஸ்டிக் மிûஸல் அல்லது ஐ.ஸி.பி.எம்.) என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் ஏவுகணை திட்டத்தில் இது முக்கியமான மைல் கல் என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர். கண்டம் விட்டுக் கண்டம் பாயும் இத்தகைய ஏவுகணையை வெற்றிகரமாகச் செலுத்தி, தங்களது ராணுவத்தில் சேர்த்திருக்கும் மற்ற நாடுகள், அமெரிக்கா, ரஷியா, ஃபிரான்ஸ், சீனா மட்டுமே.

 

புதன்கிழமை நடக்க இருந்த சோதனை, இடி மின்னல் கொண்ட வானிலை காரணமாக ஒத்திப் போடப்பட்டது. வியாழக்கிழமை காலையும் லேசான மழை இருந்தபோதிலும் ஏவுகணையைச் செலுத்த விஞ்ஞானிகள் தீர்மானம் செய்தனர். ஏவு தளத்திலிருந்து செலுத்தப்பட்டவுடன் செங்குத்தாக விண்ணில் பாய்ந்த அக்னி-5 மஞ்சள், வெள்ளை வண்ணப் புகைககளைக் கக்கியபடி பறந்து கண்ணிலிருந்து மறைந்தது. குறிக்கப்பட்ட நேரமான 15 நிமிஷங்களில் குறித்த இலக்கை அது தாக்கியது.

 

அக்னி-5… அக்னி-4 ரக ஏவுகணை கடந்த ஆண்டு நவம்பர் 15-ல் இதே சோதனை தளத்திலிருந்து வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. 3,500 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது அக்னி-4.

 

அதன் வெற்றியைத் தொடர்ந்து மேலும் அதிக தூரம் பறந்து தாக்கும் அதிகத் திறன் கொண்ட ஏவுகணையைத் தயாரிப்பதில் டி.ஆர்.டி.ஓ. கவனம் செலுத்தியது. 20 விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடங்களில் இதற்கான பணிகள் நடைபெற்றன. சுமார் எண்ணூறு விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு வகையில் இதன் ஆராய்ச்சி 4 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது என்று கூறலாம் என்று திட்ட இயக்குநர் அவிநாஷ் சந்தர் தெரிவித்தார்.

 

இதற்கு முன்பு விண்ணில் செலுத்தப்பட்ட அக்னி ஏவுகணைகள் அனைத்துமே இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டாலும் அக்னி-5ல் உள்ள பல தொழில்நுட்பங்கள் மிகப் புதுமையானவை. இதன் இலக்கை நோக்கிச் செல்ல வழி காட்டும் நேவிகேஷன், கைடன்ஸ் தொழில்நுட்பம், எடுத்துச் செல்லும் ஆயுதத்தின் தன்மை குறித்த தொழில்நுட்பம் மற்றும் என்ஜின் தொழில்நுட்பம் ஆகியவையும் மிகவும் நவீனமானவை.

 

அக்னி வரிசை… அக்னி ஏவுகணை வரிசையில் முதலாவது, 700 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடியது.

 

அக்னி-2 ஏவுகணை 2000 கி.மீ. தூரத்தில் இருக்கும் இலக்கைத் தாக்கக் கூடியது. அக்னி-3 மற்றும் அக்னி-4 ஆகிய இரு ஏவுகணைகளும் 2,500 கி.மீ. முதல் 3,500 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கக் கூடியது திறன் கொண்டவை.

 

இன்னும் ஓராண்டு காலம் அக்னி-5 ஏவுகணையில் மேலும் பல சோதனைகள் நடத்தப்படும். ஒவ்வொரு முறையும் புதிய திறன்களுக்கான சோதனைகள் நடத்தப்படும் என்று வி.கே.சாரஸ்வத் தெரிவித்தார்.

 

எங்கு தாக்கும்?

 

அக்னி-5 ஏவுகணையின் இலக்கு தூரம் ஐயாயிரம் கிலோமீட்டர் என்பதால் இது எந்தெந்த நாடுகளைத் தாக்கக் கூடும் என்று தெரிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம் இருக்கிறது.ஐ.ஸி.பி.எம். எனப்படும் கண்டம் விட்டுக் கண்டம் பறந்து தாக்கும் ஏவுகணையாதலால், இந்திய நிலப் பகுதியிலிருந்து செலுத்தப்பட்டால் வடக்குப் பகுதியில் சீனாவிலுள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் உள்ளது. ஐரோப்பாவில் இருக்கும் இலக்கையும் அக்னி-5 தாக்கக் கூடியது.

 

இந்திய நிலப்பகுதியிலிருந்து அக்னி-5 செலுத்தப்படுமேயானால், வடக்கு அமெரிக்க கண்டம், தென் அமெரிக்க கண்டம் ஆகிய இடங்களை எட்ட இயலாது.

Advertisements