தேயிலை தோட்டம் நிறைந்த வால்பாறையில் சிறுத்தைகளின் அட்டகாசத்தைத் தொடர்ந்து புலியும் வீதிக்கு வந்துள்ளது.

வால்பாறை அருகே சோலையார் அணைக்கரையில் பெரியார் நகர் உள்ளது. கடந்த ஒருவாரமாக ஆடு, மாடுகள் மர்மான முறையில் இப்பகுதியில் காணாமல் போய்வந்தன. இரு தினங்களுக்கு முன் ஒரு கன்றுக்குட்டியை அடித்துத் தின்றது புலி.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரது மாட்டுத் தொழுவத்தில் திடீரென நேற்று முன்தினம் மாடு கடுமையாக அலறித் துடித்த சப்தம் கேட்டது. இதைத் தொடர்ந்து ஞானசேகரனும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் அங்கு சென்று புலி நொண்டியபடி ஓடியது. ஆனால் காட்டுக்குள் அது செல்லவில்லை. அங்கேயே உறுமிக் கொண்டே இருந்தது.

அதிர்ச்சி அடைந்த அவர்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். புலியை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்த போது மாட்டை அது தாக்க முயன்றபோது மாடும் திருப்பி கடுமையாக தாக்கியதில் புலியின் விலா பகுதியில் கடும் காயம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. ஆனால் மாட்டுக்கு லேசான சிராய்ப்புதான்.

இந்நிலையில் தோட்டத்தின் உள்பகுதியைவிட்டு வெளியே வந்த புலியை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். இந்தப் புலிதான் இரு தினங்களுக்கு முன் கன்றுக்குட்டியை கொன்றதும் உறுதியானது.

சிறுத்தைப் புலியைப் பார்க்க ஏராளமான பொதுமக்களும் அங்கு குவிந்துவிட்டனர். தோட்டத்தின் வெளியே படுத்திருந்த புலிக்கு வனத்துறை மருத்துவர் கலைவாணன் துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து அரைமணிநேரத்தில் புலி மயங்கியது. பின்னர் வலைவீசி புலியை பிடித்து கூண்டுக்குல் அடைத்தனர்.