தமக்கெதிரான சகலவித மனித உரிமை மீறல்களையும் பாரபட்சங்களையும் கண்டித்து, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் உள்ள பலஸ்தீன் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் போராட்டம் உலக அளவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசுக்கு எதிராய் மிகுந்த அதிருப்தியையும் விமர்சனங்களையும் கிளப்பிவிட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்துள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ள பலஸ்தீன் கைதிகளைத் தமது போராட்டத்தைக் கைவிடக் கோரித் தொடர்ந்து துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை (27.04.2012) பலஸ்தீன் கைதிகள் சங்கம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், “மெகிட்டோ இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறையில் பலஸ்தீன் உண்ணாவிரதப் போராளிகளை சிறைக் காவலர்கள் அடித்தும் உதைத்தும் பலவாறு இம்சித்து வருகின்றனர். சிறை நிர்வாகம் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், அவசியமான மருத்துவ சிகிச்சைகளையும் வழங்க மறுத்து வருகின்றது; அதுமட்டுமல்ல, அநியாயத்துக்கு எதிரான தமது போராட்டத்தை மிக உறுதியோடு தொடரும் பலஸ்தீன் கைதிகளில் அனேகரை அது, ரகசிய வதை முகாம்களுக்கு எடுத்துச் சென்றுள்ளது” என்று குற்றஞ்சாட்டியுள்ளது.

இஸ்ரேலிய எதேச்சதிகார ஆக்கிரமிப்பு அரசாங்கம் தமக்கு இழைத்துவரும் சொல்லொணாக் கொடுமைகளையும், தமக்கு எதிரான மனித உரிமை மீறல்களையும் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தத்தைக் கொடுக்கும் வகையில் தமது சாத்வீகப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க முன்வருமாறு மேற்படி பலஸ்தீன் உண்ணாவிரதப் போராளிகள் சர்வதேச சமூகத்தை நோக்கி அழைப்பு விடுத்து வருகின்றனர்.

Advertisements